ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படம் குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன் ” சில நேரங்களில் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பார்க்கும்போது ‘நம்மலும் ஹீரோல’ எனத் தோன்றும். ஆனால் அமரன் படத்தின் முதல் காட்சி நடித்து முடித்ததும் எனக்கு ’நம்ம ஹீரோடா’ என்ற உணர்வு எனக்குள் வந்தது. ஏனென்றால் எனது மார்பில் நான் அணிந்துள்ள உடையில் முகுந்த் என்ற பெயர் இருக்கின்றது. மேலும் நேரடியாக இந்திய ராணுவத்தின் இடத்திற்கே சென்று படப்பிடிப்பை நடத்தினோம். எங்களைச் சுற்றிலும் ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.
டீசரில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி, அதாவது ‘ Who Are We’ என்ற காட்சி படமாக்கி முடிந்ததும் எங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் கைதட்டினார்கள். அவர்கள் எங்களிடம் பேசும்போது நீங்கள் தமிழில் பேசுகின்றீர்கள். உங்கள் மொழி எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் எங்களுக்கு புல்லரிக்கின்றது’ எனக் கூறினார்கள். இதுபோன்ற விஷயங்கள் எங்களுக்கு உத்வேகமாக இருந்தது.
மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன் எனக் கூறமாட்டேன், மிகவும் விருப்பப்பட்டுதான் இந்தப் படத்தில் நடித்தேன். ஏனென்றால் ராணுவ வீரர்கள் காஷ்மீர் தொடங்கி பல இடங்களில் அவர்கள் படும் கஷ்டத்தின் முன்னால் நாம் படும் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதற்கு உண்மையாக நாங்கள் உழைத்திருக்கின்றோம். சாய் பல்லவியும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.
இவரின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகின்றார் என்பது எனக்குத் தெரியாது. ரொம்ப நாட்களுக்குப் பின்னர் ராஜ்குமார் பெரியசாமி சொல்லித்தான் சாய் பல்லவி நடிக்கிறார் என்று எனக்கு தெரியும். எனக்கு முகுந்தின் மனைவியை, குழந்தையைப் பார்க்கும்போது எனது அம்மாவைப் பார்ப்பதைப் போலவும், அக்காவைப் பார்ப்பதைப் போலவும் இருந்தது. எனது அப்பாவும் வேலையில் இருக்கும்போதுதான் இறந்துபோனார். ஆனால் எனது அப்பா போருக்குச் செல்லவில்லை, சண்டையும் போடவில்லை. வொர்க் பிரஷர்ல தான் இறந்துபோனார்.
திடீரென ஒருநாள் வந்து இன்றையில் இருந்து உங்களுக்கு அப்பா இல்லை எனக் கூறினார்கள். அதன் பின்னர் அம்மா, அக்கா மற்றும் நான் என நாங்கள்தான் என்பதாக எங்கள் வாழ்க்கை என மாறிவிட்டது. எனது அப்பா இறக்கும்போது அவருக்கு வயது 50. அதேபோல் முகுந்த் அவர்கள் இறந்தபோது இந்துவுக்கு வயது 30. எந்த கஷ்டத்தை வேண்டுமானாலும் சமாளித்துவிடலாம், ஆனால் ஒருவர் இல்லை எனும் கஷ்டத்தை சமாளிக்கவே முடியாது. நான் இந்துவிடம் அதிகம் பேசவில்லை. அவரிடம் இருக்கும் சில குணாதிசயங்களை எனது வாழ்க்கைக்கு எடுத்துச் செல்கின்றேன். இந்தப் படத்தை எனது அம்மாவுக்கும் அக்காவுக்கும் காட்ட காத்துக்கொண்டிருக்கிறேன்” என எமோஷனலாகப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…