BB Tamil 8 Day 2 – கண்ணீருடன் வெளியேறிய சாச்சனா; கேப்டனான தர்ஷா – அதிரடி காட்டிய பிக் பாஸ்

பிக் பாஸ் என்பது நமக்கு  நன்றாக பரிச்சயமான ஃபார்மட்டாக ஆகி விட்டதால் ஆரம்பத்திலேயே அதிரடியான திருப்பங்கள் எதையாவது செய்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அராஜகமான உத்திகளில் பிக் பாஸ் டீம் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே முதல் நாளிலேயே இரண்டு நாமினேஷன்கள், ஒரு எவிக்ஷன், தலைவர் போட்டி என்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

எதையும் நிரூபிக்க வாய்ப்பு தராமல், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதெல்லாம் போங்காட்டம். ஆனால் பிக் பாஸ் வீட்டின் விதிகள் எப்போதுமே கோக்குமாக்கானவை. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற லாஜிக்கை சொல்லி சமாளிப்பார்கள். 

ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். நாம் விளையாட்டாகவோ, சலிப்பான மனநிலையிலோ, தியாக மனப்பான்மையுடனோ போகிற போக்கில் சொல்லும் எந்தவொரு ஸ்டேட்மெண்ட்டும் நமக்கே பூமராங் போல திருப்பி வந்து தாக்கலாம் என்பதற்கான உதாரணம், சாச்சனாவின் முதல் எவிக்ஷன். 

பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? – நாள் 1

பின்னால் வரப் போகிற உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிக்காமல், ஆண்கள் அணி இட்ட வில்லங்கமான விதிக்கு பெண்கள் அணி எப்படி ஓகே சொல்லலாம்? என்கிற ‘ஒத்துழையாமைப் போராட்டத்தை’ விடியற்காலை வரைக்கும் நடத்திக் கொண்டிருந்தார் ஜாக்குலின். இதனால் சக பெண்களின் விரோதத்தையும் அவர் சம்பாதிக்க வேண்டியிருந்தது.  ஜாக்குலினின் தரப்பில் நியாயம் இருக்கிறது. யாரோ எங்கோ எடுக்கிற முடிவிற்கு தொடர்பில்லாத நான் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? என்று அவர் கேட்கிற கேள்வியும் செய்கிற கலகமும் சரியானது. இந்த விளையாட்டில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த ஸ்ட்ராட்டஜியும் கூட. 

“இந்தப் பசங்கள்லாம் எப்பவும் ஒத்துமையா இருக்காங்கப்பா.. அவங்க நடுவுல பொிசா கருத்து வேறுபாடு வரதில்லை. ஆனா பெண்கள் கிட்டதான் ஒத்துமை வரதேயில்ல” என்கிற வரலாற்று உண்மையை வாக்குமூலம் போல, பிறிதொரு தருணத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் தர்ஷிகா. “பசங்க எப்பவுமே அப்படித்தான். பொண்ணுங்கதான் பிரச்சினை பண்ணுவோம்” என்று இதை வழிமொழிந்தார் பவித்ரா. (‘உங்க ரெண்டு பேரோட நேர்மை ரொம்பவே பிடிச்சிருக்கு’!) 

கோடு போட்டு வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் ‘எங்க ஏரியா உள்ள வராத’ என்கிற வேக்அப்  பாடலை குறியீடாக ஒலிக்க விட்டார் பிக் பாஸ். 

இப்போதைய பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் உள்ளே வரும் போதே பயங்கரமான முன்தயாரிப்புடன் வருகிறார்கள். (இதற்காக ஏதாவது பயிற்சி நிலையம் இருக்கிறதா?) “பிக் பாஸாக வந்து டாஸ்க் தரும் வரையெல்லாம் நாம் காத்திருக்க வேண்டாம். நம்மைப் பற்றி மக்கள் அறிவதற்கான சந்தர்ப்பத்தை நாமே அமைத்துக் கொள்வோம்” என்கிற ஆலோசனையை ரவீந்திரன் சொல்ல “உன்னை மாதிரி ஒரு ஆளைத்தான்யா தேடிட்டு இருந்தேன்’ என்று துரைசிங்கத்தை அப்பாயிண்ட் செய்த விஜயகுமார் மாதிரி  பிக் பாஸ் அகம் மகிழ்ந்திருக்கலாம். 

பிக் பாஸ் வீடு

போட்டியாளர்கள் சுயமாக விளையாடிய டாஸ்க்

‘24 மணி நேரத்திற்குள் எவிக்ஷன் என்பதை ஏற்க முடியாது. இந்த ஆட்டத்தில் நீடிப்பதற்கு நான் தகுதியான ஆள்’ என்கிற தலைப்பில் ஒவ்வொருவரும் பேச வேண்டும். இதுதான் போட்டியாளர்கள் அவர்களாகவே தங்களுக்குள் ஏற்பாடு செய்து கொண்ட டாஸ்க்.

 ‘ஒரு மாசத்திற்கு தேவையான டிரஸ், அசசரீஸ் எல்லாம் கஷ்டப்பட்டு செலக்ட் செஞ்சு கொண்டு வந்திருக்கேன். அதையெல்லாம் போடறதுக்காகவே நான் இருந்தாகணும்’ என்கிற லட்சியக் காரணத்தை தர்ஷா குப்தா சொன்ன போது ‘ஏம்மா.. இதெல்லாம் ஒரு காரணமா?.. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’ என்று கடுப்புடன் கேட்கத் தோன்றியது. 

விஜய் சேதுபதி முன்னிலையில் மேடையில் பாடிய கானா பாடலை மீண்டும் வீட்டுக்குள் பாடிய ஜெஃப்ரி ‘மத்தவங்களை நான் எண்டர்டெயின் பண்ணுவேன்” என்று சொல்ல ‘நீ  ஆகச் சிறந்த கலைஞன்டா” என்று பாராட்டினார் ரவீந்திரன். (ஆனால் இவர்தான் ஜெஃப்ரியை அன்று மாலையே நாமினேட் செய்தவர்). “தம்பி.. கொஞ்சம் இரு.. நீ பாடறப்ப, மத்தவங்க கைத்தட்டற சத்தம்.. பாடல் வரிகளைக் கேட்க விடாம செய்யுது” என்று சொல்லி பின்னணி இசை இல்லாமல் ஜெஃப்ரியை பாடச் செய்து மகிழ்ந்தார் ரஞ்சித். (மனுஷன் அனிருத் பாட்டையெல்லாம் கேட்டதில்ல போல!). 

‘24 மணி நேரத்திற்குள் ஒருவரை வெளியே அனுப்புவது அநீதியின் உச்சம். அதுவே என்னை அனுப்புவதென்றால் அது அராஜகத்தின் இமயம்’ என்று ரைமிங்காக சொல்லி கைத்தட்டல் வாங்கினார் முத்துக்குமரன். ‘நான் வீட்டுக்கு ஒத்த புள்ள’ என்று ஆரம்பித்து சென்டிமென்ட்டாக எதையோ பேசினார் ரஞ்சித். ‘என்னோட 25 வருஷ உழைப்பை 24 மணி நேரத்துல போக்கிக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ரத்தினச்சுருக்கமாக சொல்லி கைத்தட்டலைப் பெற்றுக் கொண்டார் தீபக். 

சாச்சனாவின் சொந்த செலவு சூனியம்

“ஒருத்தர் கிட்ட பழகாமயே வெறுக்கக்கூடாது. பழகிப் பார்த்துத்தான் முடிவெடுக்கணும்” என்று லாஜிக் பேசிய ரவீந்திரன், ஆமை-முயல் கதையை எல்லாம் திருப்பிப் போட்டு சொல்லி தலையைச் சுற்ற வைத்தார். இப்படி ஆளாளுக்கு மெனக்கெட்டு தொண்டைத் தண்ணீர் வற்ற தங்களின் எவிக்ஷனை டிஃபெண்ட் செய்து பேசிக் கொண்டிருக்க, நடுவில் அமர்ந்திருந்த சுனிதா மேக்அப் போட்டுக் கொள்வதில் மிக கவனமாக இருந்தார். அந்த அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டியே ஆக வேண்டும். 

சாச்சனா

“பெண்கள் அணி முடிவெடுக்கற சமயத்துல நானும் ஒருத்தியா அதுல இருந்தேன். அதனால வெளியே போறதுக்கு நான் தயாரா இருக்கேன்” என்று தியாகி போல சாச்சனா சொந்த செலவு சூன்யத்துடன்  வாக்குமூலம் தர  “நீ சின்னப்பொண்ணு. தைரியமா விளையாடறே. அப்படில்லாம் நெகட்டிவ்வா சொல்லக்கூடாது” என்று மற்றவர்கள் பாவனையாக பதறி தடுத்தாலும், ‘ஹப்பாடா! ஒரு பலியாடு தானா வந்து பிரியாணி அண்டால குதிக்குது. இன்னிக்கு விருந்து போட்டுற வேண்டியதுதான்’ என்று அப்போதே  உள்ளுக்குள் முடிவு செய்திருப்பார்கள் போல. பின்னர் இந்த ஸ்டேட்மெண்ட்டே சாச்சனாவிற்கு வினையாக வந்து அமைந்தது. 

அதனால்தான் துவக்கத்தில் சொன்னேன், நாம் விளையாட்டாக பொதுவில் சொல்லும் எந்தவொரு விஷயமும் நமக்கே எதிராகத் திரும்பலாம். கவனத்துடன் பேச வேண்டும் என்பதற்கான உதாரணம், சாச்சனாவின் ஸ்டேட்மென்ட்

இரண்டு அணியும் தீர்மானித்த வீட்டின் விதிமுறைகள்

‘ஆண்கள் Vs பெண்கள்ன்னு வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கு. உங்க முடிவுப்படி யார் எந்தப் பக்கம் தங்கப் போறீங்கன்னு தீர்மானம் ஆகியிருக்கு. ஹாப்பிதானே?’ என்று சபையைக் கூட்டி பிக் பாஸ் கேட்க ‘இதில் தங்களுக்கு சம்மதமில்லை’ என்பதை தர்ஷிகாவும் ஜாக்குலினும் ஆட்சேபம் தெரிவித்தாலும் அதனால் ஒன்றும் பயனில்லை. ‘வீட்டின் விதிமுறைகள் என்னென்னன்னு நீங்களே பேசி முடிவுக்கு வாங்க. உங்க இனத்துக்கு பெருமை சேருங்க” என்று அடுத்த குடுமிப்பிடிச் சண்டைக்கான விதையைப் போட்ட பிக் பாஸ் ‘கோட்டைப் போட்டாச்சு.. கோட்டை விட்டுடாதீங்க’ என்று ரைமிங்காக சொல்லி முடித்துக் கொண்டார். (கவித.. கவித!)

எனவே இரண்டு அணிகளும் தனித்தனியாகப் பேசி சதியாலோசனை செய்தார்கள். கிச்சன் ஏரியா ஆண்கள் அணியின் பக்கமாக இருந்தது ஒரு பிளஸ் பாயிண்ட். எனவே,  ‘சாப்பாடு வேணும்னா.. அவங்கதான் சமைக்கணும்.. பாத்திரம் கழுவணும்.. பெருக்கணும். தண்ணி வேணும்னா கூட அதன் பொறுப்பாளரான ரவீந்திரனைக் கேட்கணும்’ என்று கிச்சன் காபினெட் அதிகாரத்தை வலுவாகப் பயன்படுத்த ஆண்கள் அணி ஆலோசித்துக் கொண்டிருந்தது. ‘அவங்க வாக்குமூல அறைப் பக்கம் வரணும்னாலே நாக்கைப் பிடுங்கற மாதிரி கேள்வி கேட்கணும்’ என்பது மாதிரி இன்னொரு பக்கம் பெண்கள் அணியும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்

‘ஓகே.. விதிமுறைகளைப் பேசிட்டீங்களா.. வந்து சொல்லுங்க.. இதை புக்கா அச்சிட்டு தரப் போறோம்’ என்று இந்த சீசனின் முதல் புத்தகப் பரிந்துரையை ஆரம்பித்தார் பிக் பாஸ். பெண்கள் அணியில் இளம் வயதினராக இருந்தாலும் சாச்சனா சொன்ன ஆலோசனைகள் மற்றவர்களால் கவனமாக கேட்கப்பட்டன. போலவே ஆண்கள் அணியில் முத்துக்குமரன் சொன்ன ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே கன்ஃபெஷன் ரூமில் பேசுவதற்கு அவர்களையே அனுப்பினார்கள். 

‘நாங்கள் என்னென்ன பேசி முடிவு செய்தோம்’ என்கிற விதிமுறைகளை நல்ல தமிழில் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் கோர்வையாகவும் சொன்னார் முத்துக்குமரன். இந்த பேச்சுத் திறமைதான் இவரை பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருக்க வைக்கும் என்று தோன்றுகிறது. முத்துக்குமரன் சொன்னதில் 3A, 3B என்று உபவிதிகள் எல்லாம் இருந்தன. பெண்கள் அணி சார்பாக வந்திருந்த சாச்சனா நன்றாக யோசிக்கிறார் என்றாலும் அதைக் கோர்வையாகச் சொல்வதில் தடுமாற்றம் இருந்தது. 

“நீங்க உங்களுக்குள்ள என்ன வேணா ரூல்ஸ் போட்டுக்கங்க.. ஆனா எனக்கு அதெல்லாம் செல்லாது. தெரியும்தானே?” என்று இருவரிடமும் சொல்லி தன்னுடைய கெத்தைக் காண்பித்தார் பிக் பாஸ். 

24 மணி நேர நாமினேஷன் – பலியாடாக மாறிய சாச்சனா

‘ஓகே.. அறிவிச்சபடியே ஒருத்தரை வெளியே அனுப்பிச்சி ஆட்டத்தை சூடாக்குவோம். அப்பத்தான் மத்தவங்களுக்கு பயம் வரும்’ என்று முடிவு செய்த பிக் பாஸ், 24 மணி நேரத்திற்கான நாமினேஷனை ஆரம்பித்தார். இதில் பலரும் ‘சாச்சனா நல்ல பொண்ணுதான். ஆனா வெளியே போகத் தயார்ன்னு சொல்லியிருக்கக்கூடாது’ என்கிற காரணத்தை இரக்கத்துடன் சொல்லி நாமினேட் செய்தார்கள். தன்னைத்தான் பெரும்பாலோனோர் டார்கெட் செய்வார்கள் என்பது ரவீந்திரனுக்கு முன்பே தெரிந்திருந்ததால் சாச்சனாவின் பெயரை ஏலம் விடுவது போல் மூன்று முறை சொல்லி மற்றவர்களின் மனதில் அந்தப் பெயரை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார். இது நன்றாகவே வேலை செய்தது. 

“என்னை நான் காப்பாத்திக்கணும். அதுக்காக நான் சாச்சனாவை நாமினேட் பண்றேன். ஸாரி.. டாஸ்க் விதிகள் அவங்களுக்குப் புரியல” என்று ஜாக்குலின் சொன்ன காரணத்திற்கு சாச்சனா புண்பட்டார் போல. அடுத்து அவர் எழுந்து வரும் போது பேச முடியாமல் கண்கலங்க மற்றவர்கள் வந்து ஆறுதல் சொன்னார்கள். என்றாலும் அதிகமான நாமினேஷன்களைப் பெற்ற சாச்சனா வெளியேற்றப்படுவதாக அதிகாரபூர்வமான முடிவு வந்தது. தனக்கு வழங்கப்பட்ட மாடல் டிராஃபியை கீழே போட்டு உடைக்கும் போது சாச்சனாவின் சோகம் அதிகரித்தது. “பாவம்யா.. சின்னப் பொண்ணு’ என்று பலரும் வருந்தினார்கள். அர்னவ் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார். ரஞ்சித்தின் முகத்தில் அப்பட்டமான சோகம் தெரிந்தது. 
எதையும் நிரூபிக்க விடாமல் ஒரு போட்டியாளரை வெளியே அனுப்புவதெல்லாம் பிக் பாஸ் போன்ற கோக்குமாக்கான விதிகளைக் கொண்ட ஆட்டத்தில்தான் நடக்கும். ‘மக்களின் தீர்ப்பு அடிப்படையில்தான் போட்டியாளர்களின் எவிக்ஷன் நிகழும்’ என்கிற ஆதாரமான நம்பிக்கைகளை கேலிக்கூத்தாக்கி விடுகிறார்கள். 

தர்ஷிகா – இந்த சீசனின் முதல் கேப்டன் சாதனை
‘அடுத்து நீ ரசத்தை ஊத்து. அதுல பூனை கிடைக்குதான்னு பார்க்கலாம்’ என்கிற மோடில் இருக்கும் பிக் பாஸ், வீட்டின் கேப்டனுக்கான டாஸ்க்கை ஆரம்பித்தார். மியூசிக்கல் சேர் மாதிரியான ஆட்டத்தில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் மோதியது. ஆம், நிஜமாகவே மோதிக் கொண்டார்கள். ஆட்டத்தில் தோற்றவர்கள், எதிர் தரப்பினர் முன்னேற முடியாத மாதிரி தடுப்புச் சுவர் போல் நிற்கலாம். இந்த நோக்கில் ரவீந்திரன் நின்றதெல்லாம் உண்மையாகவே தடுப்புச் சுவர்தான். 

பிக் பாஸ் வீடு

அர்னவ்வின் அலப்பறை அதிகமாக இருந்ததால் ஜாக்குலின் அதை ஆட்சேபித்துக் கொண்டேயிருந்தார். முட்டி மோதி இடித்துப் பிடித்து தள்ளுமுள்ளுவுடன் நடந்த இந்த ஆட்டத்தில் ஒருவழியாக தர்ஷிகா வெற்றி பெற்றார். கடைசி சுற்று வரை வந்து தோற்ற தீபக் ‘நான் ஒத்துக்க மாட்டேன்’ என்று அடம்பிடித்தாலும் யாரும் கேட்கவில்லை. ஆக.. பிக் பாஸ் எட்டாவது சீசனின் முதல் வாரத்தின் கேப்டன் ஒரு பெண்ணாக அமைந்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். 

அடுத்தபடியாக, இந்த வாரத்திற்கான நாமினஷனை சுடச்சுட ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘ஒருத்தரை நாமினேட் செய்வதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. மன்னிப்பு எனக்குப் பிடிக்காத வார்த்தை’ என்று பிக் பாஸ் சொன்னது, ஜாக்குலினுக்கான குறிப்பு போல. ஒவ்வொருவரும் கன்ஃபெஷன் ரூமிற்குள் வந்து இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். 

பிக் பாஸ் வீடு

பதினெட்டு போட்டியாளர்களுக்கு இடையே 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்டு விட்ட விரோதங்களும் உரசல்களும் இந்த நாமினேஷன் வாக்குமூலத்தில் எதிரொலித்தன. ‘ரஞ்சித்தும் அருணும் தங்களை ரொம்ப நல்லவங்களா காண்பிச்சுக்கறாங்க. இந்த ஆட்டத்துக்கு அது செட் ஆகாது’ என்கிற பாசாங்கற்ற காரணத்தைச் சொல்லி அவர்களை நாமினேட் செய்தார் முத்துக்குமரன். ரவீந்திரனின் மீது சரமாரியாக வாக்குகள் விழுந்தன. பெண்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்ட ஜாக்குலினுக்கும் அதிக வாக்குகள் விழுந்தன. 

ஆக.. முதல் வாரத்தில் அதிக அளவில் நாமினேட் செய்யப்பட்டு எவிக்ஷன் வரிசையில் நிற்பவர்கள், ஜாக்குலின், ரவீந்திரன், அருண் பிரசாத், முத்துக்குமரன், சவுந்தர்யா மற்றும் ரஞ்சித். ஒரே நாளில் இத்தனை சம்பவங்கள் நடைபெற்று விட்டன. இனி வரப் போகும் நாட்களில் என்னென்ன பூகம்பங்கள் வெடிக்குமோ?! பொறுத்திருந்து பார்ப்போம். 

சாச்சனாவின் எவிக்ஷன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் வந்து கருத்துக்களைப் பகிருங்கள். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.