இன்றளவும் தேசியளவில் சர்ச்சைக்கும், சிக்கல்களுக்கும் பெயர் போன யூனியன் பிரதேசம் ஜம்மு – காஷ்மீர். இந்த மாநிலத்தின் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவர் முஃப்தி முஹம்மது சையது. காங்கிரஸ் கட்சியில் தீவிர பிடிப்புக் கொண்ட இவர், சட்டமன்ற உறுப்பினராக பயணித்திருக்கிறார். இவரின் மகள் மெஹ்பூபா முஃப்தி. இவரும் காங்கிரஸில் தீவிர ஈடுபாடு கொண்டவராக வலம் வந்தனர். அதன் பயனாக 1996-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் மெஹ்பூபா முஃப்தி, பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி, ஃபரூக் அப்துல்லா கட்சியான ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்தது. இதனால் அதிருப்தியடைந்த முஃப்தி முஹம்மது சையதும், மெஹ்பூபா முஃப்தியும் 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். காங்கிரஸ், ஜே.கே.என்.சி கட்சிகளுக்கு மாற்றாக, முஃப்தி முஹம்மது சையது ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் (PDP) கட்சியை தொடங்கி தலைமை தாங்கினர். துணைத்தலைவராக இயங்கிய மெகபூபா முஃப்தி கட்சிக்காக கடுமையாக உழைத்து, தொடர்ந்து மக்களைச் சந்தித்து ஆதரவை பெருக்கினார்.
பல சிக்கல்களை சந்தித்த பி.டி.பி கட்சி
அதன் பலனாக 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி, முதல் முறை பிரதமரானது போல, பி.டி.பி 28 இடங்களில் வென்று, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, முஃப்தி முஹம்மது சையது முதல்முறை ஜம்மு – காஷ்மீர் முதல்வரானார். அதே நேரம் மெகபூபா முஃப்தி மக்களவைக்கு எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சூழலில்தான், அப்போதைய பா.ஜ.க தலைமையால், ஜம்மு – காஷ்மீர் கொடி சர்ச்சை, மாட்டிறைச்சி தடை, ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, அப்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கையில் சுனக்கம் குறித்த சர்ச்சை என பல சிக்கல்களையும், பி.டி.பி கட்சி எதிர்கொண்டு தத்தளித்தது. இதில் மற்றொரு பெரும் சிக்கலாக, ஆட்சியமைத்த அடுத்த வருடம் அதாவது 2015-ம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் முஃப்தி முஹம்மது சையது உடல் நலக்குறைவால் காலமானார்.
காஷ்மீரின் முதல் பெண் முதல்வர்
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜம்மு – கஷ்மீர் ஆளுநர் ஆட்சிக்கு கீழ் வந்தது. இந்த நிலையில்தான், 20216-ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் என்ற அந்தஸ்த்துடன், முதல்வராக அரியணை ஏறினார் மெகபூபா முஃப்தி. ஆட்சி நிர்வாக அனுபவம் இல்லாதது, கட்சியில் இருந்த குழப்பம், கட்சியை சிதறாமல் கட்டிக்காக்க வேண்டிய நிர்பந்தம், கூட்டணியில் இருந்த பா.ஜ.க அரசுடன் பல்வேறு கொள்கை முரண்பாடு, தொடர்ந்து மத்திய அரசுகளின் சர்ச்சைக்குரிய சட்டங்கள், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய வேண்டும் என்ற கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் தொடர் வலியுறுத்தல்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு, இரும்புப் பெண்ணாக ஆட்சியை நடத்திவந்தார். ஒருகட்டத்தில் காஷ்மீரின் முக்கிய அரசியல் அடையாளமாக மாறினார்.
வீட்டுக் காவல்
இந்த நிலையில்தான், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து கோரிக்கைக்கு ஆதரவு அளிக்காததால், 2018-ம் ஆண்டு பா.ஜ.க தன் கூட்டணியை வாபஸ் பெற்றது. அதனால் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்து, ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், 2019-ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு சட்டம் 370 ரத்து செய்யப்பட்டது. அதே நேரம் மத்திய அரசால், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் (இரண்டு ஆண்டுகள் வரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் காவலில் வைக்க அனுமதிக்கும்) சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) அடிப்படையில் வீட்டுக் காவலில் வைத்து, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் அப்போது இந்தியளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை என பா.ஜ.க அரசு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மீதான விமர்சனம், ஆளுநரின் அதிகாரம் மீதான குற்றச்சாட்டுகள் எனத் தொடர்ந்த சலசலப்பால் சட்டமன்றத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில்தான் இந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
படுதோல்விக்கு என்ன காரணம்?
இதற்கிடையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த மெகபூபா முஃப்தி, சட்டமன்றத் தேர்தல் தொடங்கும் முன்பே ”சட்டமன்றத் தேர்தலில் இனி நான் போட்டியிடப்போவதில்லை” என அறிவித்தார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து 81 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வெற்றிப்பெற்றாக வேண்டும் என தீவிர பிரசாரத்திலும் பங்கெடுத்தார். ஆனால், கடந்த தேர்தலில் 28 இடங்களில் வென்ற பி.டி.பி கட்சி, இந்த முறை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதியில் வென்றிருக்கிறது.
பி.டி.பி கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பதியில் கூட வெற்றிப்பெற முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. மெஹ்பூபா முஃப்தியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய பிஜ்பெஹாரா தொகுதியில், அவருடைய மகள் இல்திஜா முஃப்தி போட்டிட்டார். அந்தத் தொகுதியில் கூட பி.டி.பி கட்சி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த பெரும் சரிவுக்கு ஆரம்பத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததின் விளைவை பி.டி.பி கட்சி அறுவடை செய்திருக்கிறார் என ஒரு தரப்பும், பி.டி.பி கட்சியும், மெகபூபா முஃப்தியும் வாக்காளர்களுடனான தொடர்பை இழந்துவிட்டது போல் தெரிகிறது என இன்னொரு தரப்பும் கருத்து தெரிவித்துவருகிறது.