உலகுக்கு இந்தியா அளித்த விலை மதிப்பற்ற பரிசுதான் ஆயுர்வேதம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: உலகுக்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசுதான் ஆயுர்வேதம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 7-வது நிறுவன தின விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “ஆயுர்வேதம் உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று. இது உலகிற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையில் ஆயுர்வேதம் சமநிலையை பராமரிக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள மரங்கள், தாவரங்களின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் அறிந்து, அவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். பழங்குடியின சமூகத்தில், மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் குறித்த அறிவு அதிகமாக உள்ளது. சமூகம் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டு இயற்கையிலிருந்து விலகிச் செல்லும் போது, நாம் நமது பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறோம்.

தற்போது மக்களிடையே இயற்கை மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தற்போது ஒருங்கிணைந்த மருத்துவ முறை பற்றிய சிந்தனை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

பல தலைமுறைகளாக ஆயுர்வேதத்தின் மீது நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆயுர்வேதக் கல்லூரிகளும் அவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக, வரும் காலங்களில் தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். பல மரங்கள், தாவரங்கள் தொடர்பான பயன்பாடு குறித்து நமக்குத் தெரியாததால் அவை அழிந்து வருகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு மருத்துவ முறைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது. ஆனால் ஒருவரை ஒருவர் விமர்சிக்க முயற்சிக்கக் கூடாது. நோயாளிகளை குணப்படுத்துவதன் மூலம் மனிதகுலத்திற்கு நன்மை செய்வதே அனைவரின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.