கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டமை கடற்றொழிலாளர்களுக்கு பெரும் சலுகையாக அமைந்துள்ளது என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, பதிவு செய்யப்பட்ட மீனவர்களின் பெயர்ப்பட்டியல் நியாயமான முறையில் தயாரித்து மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கான அடிப்படை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.