புதுடெல்லி: கட்சி மேலிடம் விரும்பினால் முதல்வராக இருப்பேன் என நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ள பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் வேட்பாளர் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்வராவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நயாப் சிங் சைனி சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நயாப் சிங், சைனியை சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜவின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். வளர்ந்த இந்தியா எனும் தீர்மானத்துக்கு ஹரியானாவின் பங்கு மிக மிக முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நயாப் சிங் சைனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டின் வெற்றிகரமான பிரதமரான நரேந்திர மோடியை சந்தித்து, ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்தேன். மேலும், ஹரியானா மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் சிறப்புப் பாசத்திற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.
ஹரியானாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, பிரதமரின் கொள்கைகள் மீதான நம்பிக்கையின் வெற்றி, நல்லாட்சியின் வெற்றி, சமத்துவத்தின் வெற்றி, ஏழை நலனுக்கான வெற்றி. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஹரியானா தொடர்ந்து அயராது உழைத்து புதிய எல்லைகளைத் தொட்டு வருகிறது. அவரது தோற்கடிக்க முடியாத, களங்கமற்ற, வெற்றிகரமான அரசியல் வாழ்வின் 23 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டாவை அவரது இல்லத்தில் நயாப் சிங் சைனி சந்தித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, “இந்த மகத்தான வெற்றியின் பெருமை, கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு பலனளிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கிய பிரதமர் மோடியையே சாரும். அவரது திட்டங்களால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்துள்ளனர். பிரதமரின் கொள்கைகள் மற்றும் அவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே இந்த வெற்றி. ஹரியானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹரியானாவில் உள்ள கட்சி தொண்டர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் தொடர்பான அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்தன. இது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற சூழலை உருவாக்க முயல்கிறார்கள் என்று 4 நாட்களுக்கு முன் சொன்னேன்.
இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் எவ்வளவோ உழைத்துள்ளோம் என்றும் கூறினேன். நான் எனது கடமையை செய்துவிட்டேன். கட்சியின் உயர்மட்டக் குழுவும், எம்எல்ஏக்களும் தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். கட்சியின் உயர்மட்டக் குழுவின் அணை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். கட்சியின் பார்வையாளர்கள் வந்து என்ன செய்வது என்று பார்ப்பார்கள்.
காங்கிரஸின் மரபணு தலித்துகளை ஒருபோதும் மதிக்காது. அவர்கள் எப்போதும் தலித்துகளை மதித்ததில்லை. அம்பேத்கரையும், அரசியல் சாசனத்தையும் கூட அவர்கள் மதிக்கவில்லை. ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் அவர்களின் பொய்கள் வேலை செய்தன. ஆனால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்கள் அவர்களின் பொய்களை நிராகரித்துவிட்டன.” என தெரிவித்தார்.
ஹரியானா முதல்வராக மூத்த தலைவர் அனில் விஜ் விருப்பம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயாப் சிங் சைனி, “அனில் விஜ் எங்கள் தலைவர். அவர் ஏதாவது சொல்லி இருந்தால், அவரால் அவ்வாறு சொல்ல முடியும். என்னைப் பொருத்தவரை, கட்சி மேலிடம் விரும்பினால் நான் முதல்வர் ஆவேன்” என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சைனி, “ஆம் ஆத்மி ஊழல் சேற்றில் சிக்கிய ஒரு கட்சி. ஊழலில் காங்கிரசை விட அவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் புரிந்துணர்வு உள்ளது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர்கள் தனித்துப் போட்டியிட்டனர். மக்களவைத் தேர்தலின்போது அவர்கள் கூட்டணி அமைத்து போட்டயிட்டனர் என்பதை நாம் மறந்துவிட முடியாது” என தெரிவித்தார்.