காஞ்சிபுரம்: சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறி, இன்று (அக்.9) காலையில் போராட்டத்தில் பங்குபெற்ற தொழிலாளர்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்று போலீஸார் சோதனை நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், போராட்டப் பந்தல்களையும் அப்புறப்படுத்தினர். போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறி, இன்று காலையில் போராட்டத்தில் பங்குபெற்ற தொழிலாளர்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்று சோதனை நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் சிஐடியூ சார்பில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு பலகட்ட வார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் இருந்த ஊழியர்கள் 7 பேரை காவல் துறையினர் நேற்று வீடுவீடாகச் சென்று கைது செய்தனர்.
அதிகாலை போராட்டத்துக்கு வந்த ஊழியர்களிடம் அடையாள அட்டை உள்ளதா எனவும் சோதனை நடத்தினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் மினி லாரியில் ஏறிச் சென்றபோது அந்த லாரி கவிழ்ந்து சிலர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஈடுபட்டபோது அவரையும், போலீஸாரையும், முத்துக்குமார், எலன், ஆசிக் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனைத் தொடர்ந்தே ராஜபூபதி, ஆசிக் அகமது, பாலாஜி உள்பட 7 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.” என்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் போராட்டத்துக்கு வந்த ஊழியர்களை பேருந்திலேயே மறித்து காவல் துறையினர் அவர்கள் அடையாள அட்டையை காட்டும்படி சோதனை நடத்தினர். இதனால் பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சமூக விரோதிகள், மாவோயிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து இதை அரசுக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பவும், வன்முறையை தூண்டிவிடவும் முயற்சிப்பதால் இந்தச் சோதனை நடைபெறுகின்றனர்” என்று தெரிவித்தனர்.
சாம்சங் ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு திமுக தவிர்த்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உட்பட திமுக கூட்டணிக் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தும் இடத்துக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வர உள்ளதாகவும் கூறினர்.
இதனிடையே, தொழிலாளர் போராட்டத்தை முன்வைத்து போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் போக்கு வலுத்ததால் சுங்குவார்சத்திரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.