ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க இம்முறை பாஜக முயலாது என நம்புவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி உருவெடுத்துள்ளது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், புதிய அரசு அமைப்பது தொடர்பாக எப்போது துணை நிலை ஆளுநரை சந்திப்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மதியம் நடைபெறும். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நாளை நடைபெறும் என்று நான் கருதுகிறேன். இதன் தொடர்ச்சியாக, கூட்டணியின் கூட்டம் இருக்க வேண்டும். இதன் முடிவில், எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களுடன் துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்” என தெரிவித்தார்.
முதல்வர் பொறுப்பை நீங்கள் ஏற்க உள்ளதாக உங்கள் தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, “எனது தந்தையை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கட்சியின் தலைவர் என்ற முறையில், நாளை நடைபெறும் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் தனது முடிவை தெரிவிப்பார். அவரது அந்த முடிவை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ ஒரு முடிவை எம்எல்ஏக்கள் எடுப்பார்கள். அந்த முடிவை எம்எல்ஏக்களிடமே நாங்கள் விட்டுவிடுகிறோம். அவர்கள் தங்கள் முடிவை நாளை எடுக்கட்டும்” என கூறினார்.
29 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயலலாம் என்ற பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, “நியமன எம்எல்ஏக்கள் 5 பேர், அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். இதில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த பங்கும் இல்லை. இது சட்டமன்றத்தின் பலத்தை அதிகரிக்கும். இது அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் இந்த நியமனங்கள் மூலம் கூட, பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அதனால் அவர்கள் அதற்கு முயலமாட்டார்கள் என நம்புகிறேன். புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், பெண்கள் ஆகியோரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்கள், அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆதரவாக இருந்தால்தான் சில பலன்களைப் பெற முடியும்” என குறிப்பிட்டார்.
ஜம்மு பிராந்தியத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு எவ்வாறு செயல்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, “புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு நிறைய சவால்கள் இருக்கும். ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற ஒருவர் ஜம்முவுக்கு செல்லும்போது ஜம்மு காஷ்மீரின் முதல்வராகவே நடந்து கொள்வார். எல்லைகளை கருத்தில் கொள்ள மாட்டார். கட்சியின் நிலையில் நிற்காமல், அரசின் பக்கம் நின்று செயல்படுவார்.
அரசு என்பது வாக்களித்தவர்களுக்கானது மட்டுமல்ல. எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெற்றோமோ அந்த தொகுதிகளுக்கு மட்டுமானதாக அரசு இருக்காது. இந்த அரசு ஜம்மு காஷ்மீரின் 1.4 கோடி மக்களுக்கானதாக இருக்கும். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கூடிய விரைவில் ஜம்மு பிராந்தியத்துக்குச் சென்று நாங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம். இந்த அரசு 5 ஆண்டுகள் செயல்படும். ஜம்மு மக்கள் எவ்வாறு வாக்களித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு அரசை கொண்டிருப்பதற்கான உரிமை உள்ளது. அவர்களின் குறைகளைக் கேட்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்வதாகவும் இருக்கும் ஒரு அரசை பெற அவர்களுக்கு உரிமை உள்ளது. இப்படி இயங்கினால்தான் அது அரசு என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.