திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்ததில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர், சத்யா காலனி, பொன்விழா நகர் பகுதியில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று (அக்.8) காலை சுமார் 11 மணி அளவில் அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்தன. திருமுருகன்பூண்டி போலீஸார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், சரவணகுமார் என்பவர் நம்பியூரில் திருவிழாவுக்கு தேவையான பட்டாசு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகர் பகுதியில் உள்ள உறவினர் கார்த்திக் வீட்டில் வைத்து இந்த பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளார். சுள்ளான் என்பவர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பட்டாசு தயாரிக்கும் பொழுது வெடி விபத்து நிகழ்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளும் சேதமடைந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சரவணக்குமார் என்பவர் கோயில் திருவிழாவுக்காக வெடிகளை தயாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். சரவணக்குமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசென்ஸ் வைத்துள்ளார் ஆனால் இங்கு தயாரித்தது சட்டத்துக்கு புறம்பானது.” என்றார்.
ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறுகையில், “சேதமடைந்த வீடுகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் இங்கு பட்டாசு தயாரித்த சமபவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.