பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தின. அப்போது முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல் வராக தேஜஸ்வியும் இருந்தனர்.
பின்னர் கூட்டணியை உடைத்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் நிதிஷ்குமார். இதைத் தொடர்ந்து அரசு பங்களாவில் இருந்த தேஜஸ்வி யாதவ் அந்த வீட்டைக் காலி செய்தார்.
இந்நிலையில் அந்த பங்களாவில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி குடியேற உள்ளார். இதுகுறித்து சாம்ராட் சவுத்ரி யின் தனிச் செயலர் சத்ருகன் பிரசாத் நேற்று கூறியதாவது:
பாட்னா நகரின் தேஷ்ரத்தன் சாலை, எண் 5-ல் அமைந்துள்ள அரசு பங்களாவில் தற்போது, துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி குடியேற உள்ளார். இதற்கு முன்பு அந்த பங்களா தேஜஸ்விக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை நாங்கள் சுத்தம் செய்யச் சென்ற போது ஏசி, சோபா, கட்டில், ஃபிரிட்ஜ், நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள், மெத்தைகள் திருடு போயுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். பொருட்கள் திருடு போனதற்கு ஆர்ஜேடி கட்சிதான் காரணம் என்று பாஜகவினர் மறைமுகமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.