புதுடெல்லி: பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை 2028 வரை தொடர்ந்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2024 வரை இலவச அரிசி திட்டத்தை தொடர ஒப்புதல்: நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து 75 வது சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரையின் அடிப்படையில், நாட்டில் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக “இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறை (TPDS), பிற நலத்திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை (ICDS), அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல்” என்ற முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2022 ஏப்ரலில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரிசி செறிவூட்டும் முயற்சியை மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்தது. மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அரசின் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான இலக்கு மார்ச் 2024 க்குள் எட்டப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி, ரத்த சோகை இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சினையாக உள்ளது. இது பல்வேறு வயதுக் குழுக்கள் மற்றும் வருமான நிலைகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை பாதிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டைத் தவிர, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பிற வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறைகளும் உள்ளன. இது மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனைப் பாதிக்கிறது.
பாதிக்கப்படக்கூடிய மக்களில் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக உணவு செறிவூட்டல் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியச் சூழலில் அரிசி நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாக இது திகழ்கிறது. ஏனெனில் இந்திய மக்கள் தொகையில் 65% பேர் அரிசியை பிரதான உணவாக உட்கொள்கிறார்கள். அரிசி செறிவூட்டல் என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரங்களின்படி, இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை வழக்கமான அரிசியில் செறிவூட்டுவதாகும். அரிசி செறிவூட்டும் முன்முயற்சி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் ஒரு மத்திய அரசின் முயற்சியாக தொடரும்.
எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்க ஒப்புதல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.4,406 கோடி முதலீட்டில் 2,280 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளைப் போல, அனைத்து வசதிகளுடன் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அமைச்சரவையின் இந்த முடிவு, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை உருவாக்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பயணத்தை எளிதாக்குவதுடன், எல்லைப் பகுதிகளை, நெடுஞ்சாலை கட்டமைப்புடன் இணைப்பதை உறுதி செய்யும்.