`ப்ளீஸ் நடவடிக்கை எடுங்க' – 43 மாணவிகளின் துண்டுச் சீட்டுப் புகார்; போக்சோவில் கைதான ஆசிரியர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் வயது 35. இவர் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இவர் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் சிலர் முத்துக்குமரன் நடவடிக்கை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பில் புகார் அளித்தனர்.

பாலியல் தொல்லை

இதையடுத்து ஆகஸ்ட் 13ம் தேதி, சைல்டு ஹெல்ப் லைன் வழக்குப் பணியாளர் செண்பகமலர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகிய இருவரும் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது முத்துக்குமரன் என்ன செய்தார் என்பதை நீங்கள் தைரியமாக புகாராக அளிக்கலாம் என மாணவிகளிடம் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து 43 மாணவிகள், முத்துக்குமரன் தங்களிடம் நடந்து கொண்டதைத் துண்டுச் சீட்டில் புகார் எழுதித் தந்ததுடன், எங்களைப் பற்றி வெளியே தெரிய வேண்டாம், அவர் மீது ப்ளீஸ், நடவடிக்கை எடுங்க என ஆவேசமாகக் கூறியுள்ளனர். 43 மாணவிகள் புகார் அளித்ததால் சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர், தங்களின் விசாரணை அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில், ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

முத்துக்குமரன்

இந்நிலையில் பள்ளி மற்றும் மாவட்ட கல்வித்துறை தரப்பிலிருந்து போலீஸில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. சைல்டு ஹெல்ப் லைனுக்குத் தகவல் தெரிவித்து இரண்டு மாதம் ஆகிவிட்ட நிலையில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது வழக்கு எதுவும் பதியவில்லை என்பதால் இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் மீண்டும் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினரிடம் கேட்டதற்கு வழக்கு பதியவில்லை என்றுள்ளனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டப்படுவதால் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பின் அலுவலர் செண்பகமலர், ஆசிரியர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் அவரைக் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை முத்துக்குமரன் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் டெல்டா மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.