மைசூரு தசரா விழாவில் முதல் முறையாக இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

பெங்களூரு: உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் முதல் முறையாக இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

கி.பி. 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் இந்த விழா ஆண்டுதோறும் அரசு திருவிழாவாக‌ பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

414-வது ஆண்டாக மைசூரு தசரா விழா கடந்த 3-ம் தேதி மைசூருவில் கோலாகலமாக தொடங்கியது. வ‌ரும் அக்.12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை ஒட்டி மைசூருவில் உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர்க் கண்காட்சி, பொருட்காட்சி, இசைக் கச்சேரி, இலக்கிய விழா, கன்னட கலை பண்பாட்டை பறைசாற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், கிருஷ்ணராஜசாகர் அணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முக்கிய சாலைகள், வீதிகள் உட்பட 100 கிமீ தூரத்துக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் மைசூரு மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இலக்கிய தசராவில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளை சேர்ந்த கவிஞர்களின் கவிதைகள் வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதுவையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இந்திரன் ‘மனைவிக்கு ஒரு காதல் கடிதம்’ என்ற‌ கவிதையை வாசித்தார். இதன் கன்னட மொழிபெயர்ப்பை சென்னை பல்கலைக்கழக கன்னட மொழித்துறை தலைவர் தமிழ்ச்செல்வி வாசித்தார். இந்திரனின் கவிதைக்கு கன்னட பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தசராவில் தமிழ்ப் பாடல்கள்: இளைஞர் தசரா விழாவின் சார்பாக வரும் இன்று (செப்.09) மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினரின் இசை கச்சேரி நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளை சேர்ந்த பாடல்கள் இடம்பெறுகின்றன. இதையொட்டி இளையராஜா வெளியிட்ட காணொளியில்,“முதல் முறையாக மைசூருவில் இசை கச்சேரி நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என கன்னடத்தில் பேசியுள்ளார்.

இதையடுத்து தசரா திருவிழாவின் இறுதிநாளான 11-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க ஜம்போ சவாரி (யானை ஊர்வலம்) நடைபெறுகிறது. அப்போது 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூருவில் பிரதான சாலைகளில் ஊர்வலமாக கொண்டுவரப்படும். இதைத் தொடர்ந்து தீப்பந்த விழா நடைபெறுகிறது. இதனை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், வெளிமாநிலத்தவர்களும் லட்சக்கணக்கில் மைசூருவில் குவிந்துள்ள‌னர். இதனால் அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.