கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், தனக்குரிய 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 20 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி மீட்டிருக்கிறார் கவுண்டமணி.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமை கவுண்டமணி. ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘உள்ளத்தை அளித்தா’ உள்பட 450க்கும் மேலான படங்களில் காமெடி நடிகராக மட்டுமின்றி, ஹீரோவாகவும் பல படங்களில் நடித்தவர். கவுண்டமணி என்று நினைத்தாலே, கூடவே செந்திலுடனான கூட்டணியும் நினைவிற்கு வந்துவிட்டும்.
இன்றும் அவரது நகைச்சுவைகள் பேசப்பட்டு வருகின்றன. கடந்த 1996ல் வாங்கிய 5 கிரவுண்ட் இடத்தில் வணிக வளாகம் கட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த நிறுவனம் இவரது நிலத்தை கையகப்படுத்த முயன்றிருக்கிறது. இதனால் அவர் சிவில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் வரை கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வர, ஆக்கிரமிப்பாளர்கள் வெறியேற்றப்பட்டு கவுண்மணியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, கவுண்டமணிக்கு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 5 கிரவுண்ட் நிலம் ஒன்று உள்ளது. அதில் அவர் வணிக வளாகம் ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார். கட்டுமான நிறுவனத்திற்கு சில கோடிகளும் கொடுத்திருக்கிறார். ஆனால், கட்டடப் பணிகள் நடைபெறாமல் போனதால் அவர் நீதிமன்றம் சென்றுக்கிறார். தன்னுடைய சொத்தை மீட்டுதரக் கூறி கவுண்டமணி தரப்பில் இருந்து 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. 20 வருடங்கள் ஆன நிலையில் இப்போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருப்பதுடன், ”அந்த 5 கிரவுண்ட் 456 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் அவருக்கு வழங்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுண்டமணி.
இது குறித்து கவுண்டமணியின் நீண்ட வருட நண்பரும், மேனேஜருமான மதுரை செல்வத்திடம் கேட்டோம்.
”விஜய்யின் ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் நடிக்கும் போது, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 5 கிரவுண்ட் நிலம் ஒன்று விலைக்கு வரவே, அதை அவர் வாங்கினார். அதாவது முன்பு ராம் தியேட்டர் இருந்த இடத்துக்கு பக்கத்துல இந்த இடம் இருந்ததால, அதில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டலாம்னு நினைத்தார். அந்த கட்டிட பணிகளை மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயர்கிட்டதான் கொடுத்திருந்தார். ஆரம்ப காலத்தில் அவங்களும் இவர் சொன்னது மாதிரி அவரோட வார்த்தைகளுக்கு மதிப்பளிச்சாங்க. கட்டிட வேலை தொடர்பாக ரெண்டு பேருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்தது. அதன்பிறகு விலைவாசி உயர்ந்த காரணத்தினால் கூடுதல் பணம் கேட்டதாகவும், அதை கவுண்மணி கொடுக்காமல் விட்டதில், ரெண்டு பேருக்கும் பிரச்சனை ஆகிடுச்சு. கேஸும் ஆகிடுச்சு.
இடையே, இந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி பலரும் கவுண்டமணியிடம் கேட்டுப் பார்த்தாங்க. ஒரு காவல் துறை அதிகாரியும் ரெண்டு பேரும் சமாதானமாக போயிடுங்கன்னு சமாதான பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தார். ஆனால் கவுண்டமணி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘எதுனாலும் நீதிமன்றத்துல பார்த்துக்கறேன்’ என்று ஒரே அடியாக பதில் சொல்லிவிட்டார். அதன்பிறகு நீதிமன்றம் போனார். எப்போதுமே இடத்தின் உரிமையாளருக்குத்தானே இடம் சொந்தமாகும். அதானே நியதி. அதனால, வழக்கில் ஜெயித்திருக்கிறார் கவுண்டமணி.
இந்த வெற்றியால் சந்தோஷமாகிட்டார். அவரது மருமகனுக்கு வளசரவாக்கத்தில் ஒரு வணிக வளாகம் கட்டிக் கொடுத்திருக்கார். ஜாயிண்ட் இன்ஜினீயர்கள் ரெண்டு பேர் சேர்ந்து அந்த கட்டிட வேலைகளை முடிச்சிட்டாங்க. அதைப் போல, இந்த இடத்திலும் அவரது கனவான வணிக வளாகம் வரவிருக்கிறது.” என்கிறார் மதுரை செல்வம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…