ஹரியானா தேர்தல் முடிவுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏமாற்றமளித்திருக்கும் நிலையில் ஜாட் சமுகத்தினரின் சாதி வெறிதான் இதற்கு காரணம் எனப் பேசியுள்ளார் மாயாவதி. மேலும் அந்தச் சமூக மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் செய்துள்ளார்.
ஹரியானா தேர்தலில் மாநில கட்சியான இந்திய தேசிய லோக் தளம் (INDL) கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி (BSP).
தேர்தல் முடிவில், 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றது பாஜக. காங்கிரஸ் 37 தொகுதிகளை வென்றது. INDL இரண்டு இடங்களையும் சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளையும் வென்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி 1.8 விழுக்காடு வாக்குகளைத் தக்கவைத்தது. கூட்டணியில் இருந்த INDL 4.14 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மாயவதி, “ஹரியானா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் INDL-ம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் சாதிவெறி மிக்க ஜாட் சமூக மக்கள் பிஎஸ்பிக்கு வாக்களிக்கவில்லை என்பதையே முடிவுகள் காட்டுகின்றன. இதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் முழுமையாக மாற்றப்பட்டபோதும் சில வேட்பாளர்கள் சிறிய வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கின்றனர்.” எனக் கூறியுள்ளார்.
மேலும், “உ.பி.யின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சாதிய மனப்பான்மையை பெருமளவு மாற்றி, பகுஜன் சமாஜ் கட்சியினரை எம்.எல்.ஏ.க்களாகவும், அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் ஆக்கியிருக்கின்றனர். இவர்களைப் பின்பற்றி ஹரியானாவில் உள்ள ஜாட் சமூக மக்களும் சாதிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இது ஒரு சிறப்பு அறிவுரை” எனவும் பதிவிட்டுள்ளார்.
தேர்தலுக்காக முழு வேகத்தில் பணியாற்றிய பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு நன்றி தெரிவித்த மாயாவதி, கட்சியினரின் உழைப்பு நிச்சயம் வீண் போகாது என உறுதியளித்துள்ளார்.
“மக்கள் ஏமாற்றம் அடையவோ, நம்பிக்கையிழக்கவோத் தேவையில்லை. ஆனால் புதிய பாதையை உருவாக்கத் தயாராக வேண்டும். புதிய பாதை உருவாகும்” என நம்பிக்கையளித்துள்ளார் மாயாவதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…