மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா இயற்கை எய்தியிருக்கிறார். அவருக்கு வயது 86.
தொழிலாளிகளின் முதலாளி என தொழில்துறைகளில் சிலரை குறிப்பிடுவார்கள். அதில் முதல் முக்கியமான இடத்தை ரத்தன் டாடாவுக்கு வழங்கி அழகு பார்த்தனர் தொழில்துறை ஆளுமைகள். தொழிலாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை இவர் டாடா குழுமத்தின் தலைமை பெறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு செய்திருக்கிறார். இந்த மனிதநேயவாதி தற்போது மாய்ந்திருக்கிறார்.
மும்பையில் 1937-ம் ஆண்டு பிறந்த இவர் 10-ம் வயதிலேயே குடும்பத்தில் பல கடினமான சூழல்களை சந்தித்திருக்கிறார். ஆம், இவருக்கு 10 வயது இருக்கும்போதே இவரின் தந்தையாரும் தாயாரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிறகு, பாட்டியின் அரவணைப்பில்தான் ரத்தன் டாடா வளர்ந்திருக்கிறார். கார்னல் பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பை முடித்ததும் இவருக்கு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ரத்தன் டாடாவின் கவனம் தன்னுடைய குடும்ப நிறுவனத்தில்தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய குடும்ப நிறுவனமான `டாடா குருஸ்’ நிறுவனத்திலேயே தனது பணியைத் தொடங்கினார் .
`Born in silver spoon’ என்ற வாக்கியம் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதாவாது பெரிய பணக்காரர்களின் குடும்பத்தில் பிறந்து அந்த ஆடம்பர வாழ்க்கையிலேயே வாழ்பவர்களை இந்த வாக்கியத்தைக் கொண்டு குறிப்பிடுவார்கள். ரத்தன் டாடா நினைத்திருந்தால் அவரும் இப்படியான சூழலிலேயே தனது பணியை தொடங்கியிருக்கலாம். ஆனால், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வெடிப்பு உலை மற்றும் சுண்ணாம்புக்கல் கலவையை மேற்பார்வையிடும் வேலையைதான் முதலில் முழுமையாக கவனித்து வந்திருக்கிறார். இந்த பணியின் மூலமாக 1962-ம் ஆண்டு டாடா குழுமத்திற்குள் வந்தார். ஜே.ஆர்.டி டாடாவுக்கு பிறகு 1991-ம் ஆண்டு டாடா குழுமத்தின் சேர்மேன் பதவியில் அமர்ந்தார்.
1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் சேர்மேனாக இருந்திருக்கிறார். இவர் இந்த பதவியில் இருக்கும்போது டாடா குழுமத்தின் லாபம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. கிட்டதட்ட ரத்தன் டாடா தலைமையில் குழுமத்தின் வருவாய் 40 மடங்கு உயர்ந்திருக்கிறதாம். `டெட்லி – டாடா டீ, டாடா மோட்டார்ஸ் – லேண்ட் ரோவர் ஜாகுவார், டாடா ஸ்டீல் – கோரஸ் ‘ போன்ற முக்கியமான இணைப்பு நிறுவனங்கள் இவர் தலைமையில் இருக்கும்போதுதான் உருவாகின. நடுத்தர குடும்பங்களுகாக 1 லட்ச ரூபாய்க்குள் கார் டிசைன் செய்ய வேண்டும் என இவர் கனவுடன் திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டப்படி ரத்தன் டாடாவின் கனவு `டாடா நானோ’ கார் மூலம் நனவாகியிருக்கிறது. இப்படி பல விஷயங்களை இவர் டாடா குழுமத்தின் தலைமையில் இருக்கும்போது சாத்தியப்படுத்தினார்.
மக்களின் நலனுக்காக பல லட்ச ரூபாயை நன்கொடையாக அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறார். கிட்டதட்ட `டாடா சன்ஸ்’ குழுமத்தின் வருவாயிலிருந்து 66 சதவிகிதத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என கிராமப்புற வளர்ச்சிக்காகவும் சில முன்னெடுப்புகளை ரத்தன் டாடா தலைமையில் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர் படித்த கார்னெல் பல்கலைகழகத்துக்கு இந்தியாவிலிருந்து பலரும் படிப்பதற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பல்கலைகழகத்துக்கு மொத்த தொகையை இவர் வழங்கியிருக்கிறார். அனைவருக்கும் சமமாக கல்வி கிடைக்க வேண்டும் என்ற கனவுடன் கல்விக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார் ரத்தன் டாடா!
ஆழ்ந்த இரங்கல்கள்!