பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர். 1937-ம் ஆண்டு பிறந்த இவர் அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலை கழகத்தில் மேலாண்மைக் கல்வி படித்தார். 30 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பலனாக இந்தியாவின் மிக முக்கிய அடையாளமாக, தன் நிறுவனமான டாடா சான்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இளைஞர்களுக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பது முதல், தன் தொண்டு நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட சேவைகளைச் செய்துவந்தார்.
இந்த நிலையில், சிலநாட்களுக்கு முன்பாக, 86 வயதான ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ICU பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ரத்தன் டாடாவே தன் எக்ஸ் பக்கத்தில், தனது உடல்நிலை நன்றாகவே இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாகவும் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், இன்று மாலை மீண்டும் ரத்தன் டாடாவின் உடல்நிலை மோசமடைந்ததாகத் தகவல் வெளியாது. மீண்டும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து ஆனந்த மஹிந்தரா தன் எக்ஸ் பக்கத்தில், “ரத்தன் டாடா இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் ஒரு வரலாற்று பாய்ச்சலின் உச்சத்தில் நிற்கிறது.
நாம் இந்த நிலையை அடைவதற்கு ரத்தன் டாடாவின் வாழ்க்கையும், அவரின் பணியும் தான் காரணம். எனவே, அவரது வழிகாட்டுதல் விலைமதிப்பற்றதாக இருந்தது. அவர் மறைவுக்கு நாம் செய்ய வேண்டிய அஞ்சலி, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு உறுதி ஏற்பதுதான். ஏனெனில் தொழிலதிபராக இருந்த அவரின் செல்வமும், வெற்றியும் உலகளாவிய சமூகத்தின் சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. good bye டாடா. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள். ஏனென்றால் லெஜெண்ட்கள் ஒருபோதும் இறக்கமாட்டார்கள்…” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ரத்தன் நேவல் டாடாவின் மறைவால், இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். அவரின் இந்தியாவை உள்ளடக்கிய வளர்ச்சியும், இந்தியாவின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பும் மிகவும் முக்கியமானது. ரத்தன் டாடா நேர்மையும், ஒருமைப்பாடும், அவரின் நெறிமுறையும் சிறந்த தலைமைக்கு இணையானதாக இருந்தது. அவர் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும், அடையாளமாகவும் இருந்தார். தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவரது அன்புக்குரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் எமது அனுதாபங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.