இந்தியாவின் அடையாளமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைந்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவற்றை மறுத்து, எனது உடல்நிலை குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் வயோதிகம் காரணமாக மேற்கொள்ளும் சாதாரண மருத்துவ சோதனையையே மேற்கொண்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
நேற்று (09.10.2024) மாலை, ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில், ரத்தன் டாடா மறைந்த செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ரத்தன் டாடா மறைவு குறித்து மஹிந்திரா குழுமத்தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “ரத்தன் டாடா மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியப் பொருளாதாரம் வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. நாம் இந்த நிலையில் இருப்பதில் ரத்தன் டாடாவின் வாழ்க்கைக்கும் அவர் செய்த பணிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
அவரது வழிகாட்டுதல்களும் கற்பிதங்களும் இந்த நேரத்தில் விலை மதிப்பற்றவையாக இருந்திருக்கும்.
அவரது மறைவுக்குப் பிறகு, அவரை முன்மாதிரியாகப் பின்பற்ற நாம் உறுதியளிக்க வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு தொழிலதிபராக இருந்தார், அவருடைய செல்வமும் வெற்றியும் உலகளாவிய சமூகத்தின் சேவைக்கு அர்பணிக்கப்பட்டு பயனுள்ளதாக இருந்தது.
குட் பை மற்றும் Godspeed, Mr.T
நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள்
ஏனென்றால் லெஜெண்ட்ஸ் எப்போதும் இறப்பதில்லை
ஓம் சாந்தி” என இரங்கல் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.