சாம்சங் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீ பெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் ஆலையின் தொழிலாளர்கள், கடந்த 30 நாள்களாக, சிஐடி அமைப்பை பதிவு செய்வது, ஊதிய உயர்வு, 8 மணி நேரம் மட்டும் வேலை, சரியான முறையில் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இதில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில், நேற்று சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “முதல்வர் ஸ்டாலின் சாம்சங் நிறுவன ஊழியர்கள் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி அமைச்சர் குழுவை அமைத்தார். தொழிலாளர் நலனையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும் என்ற அக்கறையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
தொழிலாளர்களுடன் ஒப்பந்தம்
தொழிலாளர்களுடன் சாம்சங் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக ஒப்பந்தம் போடப்பட்டிருகிறது. பேச்சுவார்த்தியின் பயனாக தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக மாத ஊதியத்துடன் ரூ.5000 சிறப்பு ஊக்கத்தொகை அக்டோபர் 1 முதல் வழங்கப்படும்.
பணிக்காலத்தில் தொழிலாளர் இறந்தால், உடனடி நிவாரணமாக அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும், தொழிலாளர்கள் வந்து செல்வதற்கான குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, மருத்துவ வசதி, உணவு வசதி, ஓய்வு வசதி, குடும்ப நிகழ்வுகளுக்கான விடுமுறை போன்றவை அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிஐடி அமைப்பின் பதிவு
சாம்சங் ஆலையில் இருக்கும் சிஐடி அமைப்பின் பதிவு குறித்துதான் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிடும் தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை கண்டிப்பாக நிறைவேற்றும்.
இது தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் உள்ளிட்டப் பலரும் இதில் பாதிப்படைவார்கள். மேலும், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். இதை கவனத்தில்கொண்டு சிஐடி அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
வீடு புகுந்து கைதெல்லாம் நடக்கவில்லை. ஒரு விபத்து நடந்தது. அவர்களைக் காப்பாற்ற சிலர் செல்கிறார்கள். அவர்களுக்கும் காவல்துறைக்கும் சிறு மோதல் ஏற்படுகிறது. அதில் ஈடுபட்டவர்களைதான் காவல்துறை கைது செய்தது. அவர்களும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.
சிஐடி அமைப்பை பதிவு செய்தவதில் தமிழ்நாட்டின் தொழிலாளர் நலத்துறைக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், அந்த அமைப்பை பதிவு செய்வதற்கு சாம்சங் நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதாவது, சிஐடி அமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என 2.7.2024 அன்று சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மனு கொடுக்கிறார்கள். 20.8.2024 அன்று சாம்சங் நிறுவனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தது.
நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்..
அந்த எதிர்ப்பு மனு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என 3.9.2024 அன்று சிஐடி-க்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அந்த கடிதத்துக்கும் சிஐடி பதிலளிக்கிறது. அந்த பதிலை சாம்சங் நிறுவனத்துக்கு அனுப்பினோம். அவர்களும் தங்கள் பதிலை கொடுக்கிறார்கள். இதெல்லாம் நடைமுறைப்படி நடந்துவரும் போதுதான், 30.9.2024 அன்று இது தொடர்பாக சிஐடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எனவே, இதில் நீதிமன்றம் உள்வந்திருப்பதால், இனி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறதோ அதை அரசு செயல்படுத்தும்.
தமிழ்நாடு முதலீடுகளுக்கான சிறந்த மாநிலமாக இருப்பதால், இந்தப் பிரச்னையை அரசியலாக முதல்வர் பார்க்கவில்லை. இந்த அரசு தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்சாலைகளும் நிம்மதியாக செயல்பட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்கிறது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் அரசியல் கட்சிகளுக்கு என்னமாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமோ, அதேபோன்ற நடவடிக்கைதான் அந்த மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது செயல்படுத்தியது.
இந்த அரசு எப்போதும் அடக்குமுறை செய்யாது. பல தொழிற்சாலைகளில் சிஐடி அமைப்பு பதிவு செய்யப்பட்டிருகிறது. இந்த தொழிற்சாலையில்தான், அந்த நிறுவனமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கைதான் மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றதால்தான், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.