மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே. வாசன், கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “த.மா.கா.,வில் சென்ற மாதம் முதல் தேதியில் தொடங்கிய உறுப்பினர் சேர்க்கை பணி இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய வான் படை சாகச நிகழ்ச்சி சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை மத்திய அரசு கொடுத்திருப்பது நன்றிக்குரியது. ஆனால், அதனைத் தமிழக அரசு முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்திய வான் படையின் பலத்தை இந்திய மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் சாகசங்களை நம்முடைய வான்படை வீரர்கள் நடத்திக் காட்டினார்கள். அதனைப் பாராட்டும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள்
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அடிப்படை வசதிகள் செய்யாத காரணத்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் அங்கே மயக்கமடைந்து விழுந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார்கள், 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனைக்குரியதாகும். அரசின் அஜாக்கிரதைதான் இதற்குக் காரணம்.
உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் போதாது, குறைந்தபட்சம் ரூ. 25 லட்சமாவது அரசு வழங்க வேண்டும். காயமடைந்த மற்றும் மயக்கமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து பத்திரமாக வீடு திரும்பும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை உள்ளதென்றால் ஒரு காலக்கெடுவுக்குள் டாஸ்மாக்கை மூட இந்த அரசால் முடியும். மூடக்கூடாது என்ற முடிவோடு இருப்பதால் மத்திய அரசின் மீது பழி போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது. மக்கள் உங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கட்சி வெல்லும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். பா.ஜ.க.,வும், பிரதமர் மோடியும் ஜம்மு காஷ்மீரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தார்கள். அந்த மாநிலம் ஜனநாயக மதிப்பீட்டுடன் மேலும் வளர வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்ததைவிட அதிகமான இடங்களை பா.ஜ.க., தனித்துப் பெற்றுள்ளது. பா.ஜ.க., எடுத்த மிகப்பெரிய வரலாற்றுப்பூர்வ முடிவைப் பெரிய அளவில் மக்கள் எதிர்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அங்குப் பிராந்திய கட்சிகள்தான் காங்கிரஸ் கூட்டணி இல்லாமலேயே வெற்றிபெறக் கூடிய நிலையிலேயே இருக்கிறது.
ஹரியானாவில் மூன்றாவது முறை பா.ஜ.க., ஆட்சியில் அமரக்கூடிய சூழல் உள்ளதென்றால் பத்தாண்டுகளுக்குப் பிறகும் எதிர்மறை வாக்கு அங்கு இல்லை. ஆட்சியாளர்களுடைய நல்ல பணிக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.
‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்கிற வார்த்தை தலைவர் மூப்பனார் தலைமையில் 1999 ஆம் ஆண்டு தொடங்கிய கூட்டணியிலே உருவானது. அத்தனை கட்சிகளுக்கும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று நினைக்கும் அதனை எல்லா கட்சியினுடைய பொறுப்பில் இருக்கின்ற தலைவர்களும் தொண்டர்களும் விரும்புவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
ஜனநாயகத்திலே எந்த துறையைச் சார்ந்தவர்களும் கட்சி தொடங்கலாம். அது தமிழகத்தில் புதிதல்ல. பல புது கட்சிகள் தோன்றியதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அடிப்படையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே த.மா.கா., சார்பிலே வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறோம்.
புதிய கட்சி என்றால் அதனுடைய முதல் பணி கொடி, அதற்குப் பிறகு மாநாடு, இது வழக்கம். அவருடைய இலக்கு என்ன? அதனை அடைவதற்கான வழி என்ன? அதற்கு உண்டான செயல்பாடு என்ன? என்பது அவர் களத்தில் இறங்கிய பிறகுதான் தெரியக்கூடும். பிரபலமான ஒரு நடிகர் ஒரு இயக்கத்தைத் தொடங்குகிறார் என்றால் அவரோடு சேரப் போகிறவர்கள் இதுவரையில் எந்த கட்சிக்கும் வாக்களிக்காதவர்களாக இருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs