இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராப்ட் கிங் எயார் (Beechcraft King Air 360ER) விமானம் நேற்று (10) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமெரிக்க தூதுவர் அதிமேதகு ஜூலி சங் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இந்த நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு அதிதிகளை வரவேற்றார்.
இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கூட்டாளர் திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ரேடார் மற்றும் மேம்பட்ட எலக்ட்ரோ-ஆப்டிகல்/இன்ஃப்ராரெட் (EO/IR) அமைப்பு உட்பட கடல்சார் டொமைன் கண்காணிப்பு சாதன பொருத்தப்பட்டுள்ளது. இது நமது கடல்சார் கண்காணிப்பு திறன்களை பெரிதும் மேம்படுத்த உதவும்.
கட்டுநாயக்க விமான தளத்தை வந்தடைந்த மேற்படி புதிய விமானத்திற்கு விமானப்படை சம்பிரதாய முறைப்படி தண்ணீர் பீச்சி மரியாதை செலுத்தி (water salute) வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் அமெரிக்க தூதுவர், அட்மிரல் கோஹ்லர் மற்றும் விமானப்படை தளபதியுடன் பிரதம அதியான பாதுகாப்பு செயலாளர் விமானத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், இந்த பெறுமதியான நான்கொடைக்காக அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, இது நமது கடல் ரோந்து திறன்கள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்கும் திறன் ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்தும் என்று கூறினார்.
“விமானப்படைக்கு இவ்விமானம் பெற்றுக் கொள்ளப்படுவது என்பது புதிய சொத்துக்களை பெறுவது மட்டுமல்ல; இது நமது திறன்கள், நமது தயார்நிலை மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான நமது அர்ப்பணிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதாகவும் அமையும்” என மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.