புதுடெல்லி: உத்தரப்பிரதேசம், அலிகார் நகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் மீதான ஏழு நீதிபதிகள் கொண்ட முழு அமர்வின் தீர்ப்பு விரைவில் வெளியாகிறது.
பழம்பெரும் மத்திய கல்வி நிறுவனமாக இருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். உபியில் அலிகர் நகரில் இது சுமார் 150 வருடங்களுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயிலும் இக்கல்வி நிறுவனத்தில் அவர்களுக்காக ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களுக்கு முன் அலகபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பின் அமர்வு விசாரணை செய்து வந்தது.
சுமார் 180 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில் உள்ளன. இதனால் அதன் விசாரணையை உச்ச நீதிமன்ற முழு அமர்வு கடந்த பிப்ரவரியில் ஒத்தி வைத்தது. இதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த வழக்கின் முழு அமர்விற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமை வகிக்கிறார்.
இவர், நவம்பர் 10 ஆம் தேதி தன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே நவம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பாக எந்த நாளிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மீதான முக்கிய வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்தியாவின் முஸ்லிம் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் வட மாநிலங்களில் முஸ்லிம்களில் பலரும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றவர்கள்.
தற்போது முஸ்லிம்களுக்கான எந்த ஒதுக்கீடும் இல்லாத இப் பல்கலைகழகத்தில் சுமார் 45,000 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். சுமார் 4,000 அலுவலர்களும், 2000 பேராசிரியர்களும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.