நாட்டு மக்கள் கொண்டாடக் கூடிய தொழிலதிபராகவும் சிறந்த நன்கொடையாளராகவும் ரத்தன் டாடா விளங்கினார். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
ரத்தன் டாடா ஒருமுறை அளித்த பேட்டியில், “லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பணியாற்றியபோது ஒரு பெண் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இந்த உறவு நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால், 1962-ல் இந்தியா சீனா இடையே போர் மூண்டது. இதனால், அந்தப் பெண்ணின் பெற்றோர் இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். அத்துடன் அந்தப் பெண்ணுடனான உறவு முறிந்துவிட்டது” என்றார்.
அதன் பிறகு டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பாலிவுட் நடிகை சிமி கார்வாலும் டாடாவும் நெருங்கி பழகி வந்தனர். தோ பதான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் சிமியின் நடிப்பு பேசப்பட்டது. ‘ரெண்டஸ்வஸ் வித் சிமி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியும் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. இந்நிகழ்ச்சியில் சிமியுடன் டாடாவும் பங்கேற்றுள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் நண்பர்களாக பழகி வந்தனர்.
ரத்தன் டாடா காலமானதையடுத்து, சிமி கார்வால் தன்னுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற டாடாவின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “நீங்கள் மறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை. போய்வாருங்கள் நண்பரே” என பதிவிட்டுள்ளார்