கும்பமேளாவில் சனாதனி அல்லாதவர் உணவு விடுதி அமைக்க தடை: அகில இந்திய அகாடா பரிஷத் தீர்மானம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்டமான கும்பமேளா விழா தொடங்க உள்ளது. இதை அகில இந்திய அகாடா பரிஷத்தினர் நடத்துகின்றனர்.

இந்நிலையில், கும்பமேளா விழா ஏற்பாடுகள் குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். விழா தொடர்பான பல தீர்மானங்களை இயற்றி அவற்றை அமல் படுத்தும்படி உ.பி. மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், அகாடா பரிஷத்தினர் நேற்று நடத்திய கூட்டத்தில் சில புதிய தீர்மானங்களை இயற்றியுள்ளனர்.

அதன்படி, கும்பமேளாவில் உணவு விடுதிகளை சனாதனத்தினர் மட்டுமே அமைக்க வேண்டும். சனாதனி அல்லாதவர்கள் உணவு விடுதிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். மேலும், கும்பமேளா விழா ஏற்பாடுகளில் ஈடுபடும் பணியாளர் முதல் அதிகாரிகள் வரை சனாதனிகளாக இருக்க வேண்டும். கும்பமேளா நிகழ்ச்சிகளில் இதுவரை குறிப்பிடப்பட்ட உருது மொழி பெயர்களை இந்தி மொழியில் மாற்றி அறிவிக்க வேண்டும் என்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அகில இந்திய

அகாடா பரிஷத் தலைவர் ரவீந்திரா புரி கூறும்போது, “சமீப நாட்களாக தவறான பொருட்களை உணவு மற்றும் பழ ரசங்களில் கலப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த பிரச்சினையை சமாளிக்க, இந்து அல்லாதவர் களை உணவு, பழ ரசம் விற்பனை செய்ய தடை விதிக்க கோரியுள்ளோம். கும்பமேளாவின் புனிதம் கெடாமலிருக்க அதன் பணியில் உள்ளவர்கள் இறைச்சி மற்றும் மது அருந்தாதவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்காக அவர்களது பின்புலம் அறிவது அவசியம். இந்த தீர்மானங்கள் அனைத்தையும் தீபாவளிக்கு பிறகு முதல்வர் யோகியிடம் அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கும்பமேளாவின் தொடக்கம் முதல் கடைசி நாள் வரை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பெயர் உண்டு. இவற்றில் பல்வேறு அகா டாக்களின் துறவிகள் ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் குளிப்பது வழக்கம். மிகவும் முக்கிய நிகழ்ச்சியான இதற்கு ‘ஷாயி ஸ்னான் (ராஜ குளியல்)’ என உருது பெயர் உள்ளது. இதை ‘ராஜ்ஸி ஸ்னான்’ என்று பெயர் மாற்ற துறவிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மற்றொரு நிகழ்ச்சியான ‘பேஷ்வாய் (நுழைதல்) என்பதை ‘சாவ்னி பிரவேஷ்’ என்று மாற்றும் படி கோரப்பட்டுள்ளது. இதற்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர கும்பமேளாவில் துறவிகளின் குதிரை சவாரி நிகழ்ச்சி யான ‘ஷாயி சவாரி (ராஜ சவாரி)’ என்பது ‘ராஜ்ஸி சவாரி’ என அங்கு ஆளும் பாஜக அரசால் மாற்றப்பட்டுள்ளது. அதை பார்த்த பின் உ.பி. கும்பமேளாவிலும் இந்த பெயர் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் கும்பமேளா விழா ஏற்பாடுகளை பார்வையிட உ.பி. முதல்வர் ஆதித்யநாத், பிரயாக்ராஜ் வந்திருந்தார். அப்போது, அகில இந்திய அகாடா சபையின் கோரிக்கையை ஏற்று, கும்பமேளா பகுதியில் மது, மாமிசம் விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதித்தார். இதனால், அகாடா சபையின் தற்போதைய தீர்மானங்களும் முதல்வர் யோகியால் ஏற்கப்படும் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.