சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிளேயர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான சாதனைகளை வைத்திருக்கின்றனர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இருந்தாலும், அவர்கள் வசம் இல்லாத பல சாதனைகளை பல பிளேயர்கள் படைத்திருக்கின்றனர். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருமுறை கூட ரன்அவுட்டாக பிளேயர்களின் பட்டியலை பார்க்கலாம்.
1. முடாசர் நாசர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடிய பல பிளேயர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் முடாசர் நசார் ஒரு தனித்துவமான சாதனையை வைத்திருக்கிறார். பாகிஸ்தானுக்காக முடாசர் நாசர் 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் உட்பட 4114 ரன்களையும், 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நாசர் 2653 ரன்களையும் எடுத்துள்ளார். ஆனால், விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருமுறை கூட ரன்அவுட் ஆனதில்லை.
2. பீட்டர் மே
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் பீட்டர் மே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ஒருமுறைகூட ரன் அஅவுட் ஆகவில்லை. பீட்டர் மே 1951 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார். 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 13 சதங்கள் உட்பட 4537 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 235 ஆகும்.
3. கிரஹாம் ஹிக்
ஜிம்பாப்வேயில் பிறந்த கிரஹாம் ஹிக், இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடினார். அவர் இங்கிலாந்துக்காக 65 டெஸ்ட் மற்றும் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு வடிவங்களிலும் 3000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கிரஹாம் ஹிக் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகவில்லை. இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் தனித்து நின்று வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.
4. கபில் தேவ்
கபில்தேவ், இந்தப் பெயர் இந்திய ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். 1983 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் 175 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கபில் தேவ் எப்போதும் ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் வேகப் பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர். இந்தியாவுக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கபில் 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம், ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் மற்றும் 253 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கபில்தேவ் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகவில்லை.
5. பால் காலிங்வுட்
மூன்று வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக விளையாடிய பால் காலிங்வுட் மிகவும் அற்புதமான பேட்ஸ்மேன். அவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் நான்காயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். எப்போதும் அதிரடியாக ஆடக்கூடிய பால் காலிங்வுட் தலைமையில் இங்கிலாந்து அணி 2010 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றது. இவர் தனது சர்வதேச கிரிக்கெட்டில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகவில்லை.
இந்த பட்டியலில் மூன்று இங்கிலாந்து பிளேயர்களும், தலா ஒரு இந்திய மற்றும் பாகிஸ்தான் பிளேயர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சராசரியாக 60 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் மேல் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.