ஶ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதே சமயம் பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லாவை தேர்வு செய்ய அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, 6 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கிடைத்தவுடன், கவர்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என தேசிய மாநாடு கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பதே தங்கள் முன்னுரிமையாக இருக்கும் என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
“ஜம்மு-காஷ்மீரில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை வழங்குவோம். இங்கு ஏராளமான பிரச்சினைகள் நிலவி வருகின்றன. சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்துவதற்கு நீண்ட காலம் ஆகலாம், ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்க வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமையாக இருக்கும். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் ஆகும். மத்திய அரசு எங்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்கும் என்று நம்பிகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.