ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி புதிய அரசை அமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ஆதரவினை வெள்ளிக்கிழமை (அக்.11) தெரிவித்தது. 2019-ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக உமர் அப்துல்லா கூட்டணி அரசின் முதல்வராகிறார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உட்பட அக்கட்சியின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் இன்று (அக். 11) நடந்தது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு கடித்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து தாரிக் ஹமீது கர்ரா கூறுகையில், “காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை மத்திய தலைமைக்கு வழங்கியுள்ளோம். தேசிய மாநாட்டு கட்சிக்கு எங்களின் ஆதரவினையும் வழங்கியுள்ளோம். அதற்கான கடிதத்தை அவர்களிடம் வழங்க உள்ளோம். உமர் அப்துல்லாவை முதல்வராக ஏற்றுக்கொள்கிறோம்.
அரசு அமைந்த பின்பு இலாக்காக்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்போம். இலாக்காக்களில் எந்த வித்தியாசமும் இல்லை. அதுபோன்ற எந்த கோரிக்கைகளும் இல்லை. இண்டியா கூட்டணியின் உணர்வுக்காக, ஜம்மு காஷ்மீரின் நலனுக்காக நாங்கள் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிக்கிறோம். ஒரு நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது. ஆட்சி அமைந்ததும் அவர்களுடன் அமர்ந்து என்ன மாதிரியான ஆட்சியை உருவாக்குவது என்பது குறித்து விவாதிப்போம். இந்த கூட்டணியின் ஆன்மா, எண்ணிக்கை மற்றும் அமைச்சர் பதவிகளுக்கு அப்பாற்பட்டது” என்று தெரிவித்தார்.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு நாளை (சனிக்கிழமை) ஆளுநர் மாளிகைக்கு செல்ல இருக்கிறது. இந்தநிலையில், தேசிய மாநாட்டு கட்சிக்கு மேலும் ஒரு எம்எல்ஏ தனது ஆதரவினை வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணியின் எண்ணிக்கை 52 ஆக வலுவான நிலையில் உள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய மாநாட்டு கட்சிக்கான ஆதரவு கடிதத்தை, துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கொடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர், “ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். ஜம்முவின் தோடா தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் மேஹ்ராஜ், பாஜக வேட்பாளர் கஜாய் சிங் ராணாவை தோற்கடித்திருந்தார்.
இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை போதிய அளவில் இருப்பதால், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப திட்டமிட்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யூனியன் பிரதேசத்தில் இருந்து நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களை அனுப்ப முடியும். சமீபத்தில் நடந்த ஜேகேஎன்சி-யின் சட்டப்பேரவைக் கட்சி கூட்டத்தில் இதற்காக பரூக் அதுல்லாவின் பெயர் அடிபட்டதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.