ஸ்டாக்ஹோம்: தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு (53) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல்பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசுஅமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் ஹாப்ஃபீல்டு, இங்கிலாந்து விஞ்ஞானி ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி டேவிட் பேக்கர், இங்கிலாந்து விஞ்ஞானிகள் டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம்ஜம்ப்பர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. புரோட்டீன் கட்டமைப்பு பற்றிய ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. வரலாற்றுஅதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தும் அவரது தீவிரகவித்துவமான உரைநடைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக ஸ்டாக்ஹோமில் நோபல் கமிட்டி கூறியது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும்தென்கொரியாவின் முதல் எழுத்தாளர் ஹான் கங் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான நோபல் பரிசு இன்றுஅறிவிக்கப்படவுள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் 14-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. நோபல் பரிசுடன் 1 மில்லியன் டாலர் பணமும் வழங்கப்படும். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி விருது வழங்கப்படும்.