த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `வேட்டையன்’ திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
த.செ. ஞானவேல் `வேட்டையன்’ திரைப்படத்திற்காக விகடனுக்கு அளித்த பேட்டியில், ” நான் விகடனில் நிருபராக இருக்கும்போது அஜித், கலைஞர், என பலரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால், ரஜினி சாரை பேட்டி எடுத்ததில்லை. அப்போது அவர் மீடியாகளுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், ரஜினி சார் நடத்திய காவிரி உண்ணாவிரதப் போராட்டத்தை நான் மாணவப் பத்திரிக்கையாளராக இருக்கும்போது கவர் செய்தேன். அது ஆனந்த விகடனில் கவர் ஸ்டோரியாக வெளிவந்தது. அந்த கட்டுரைக்கான புகைப்படத்தை எடுத்தது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்தான்” எனக் கூறியிருந்தார்
27/10/ 2002 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த கவர் ஸ்டோரி பின்வருமாறு…
தாது வருட பஞ்சம் என்று தமிழகம் கொடிய பஞ்சத்தைக் கண்டிருக்கிறது. பாண்டிய நாடு என்ற இன்றைய தென் மாவட்டங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வற்கடம் கண்டதாக வரலாறு கூறுகிறது. வற்கடம் என்பது பஞ்சம். சோழ நாடும் அந்தப் பஞ்சத்திலிருந்து தப்பவில்லை. இதற்கு முன்னர் இப்படி எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பகுதி பஞ்சத்தைக் கண்டிருக்கிறது. நல்லதங்காள் காலத்துப் பஞ்சத்தில் நத்தைகள், புழுக்கள், கோரைப் புல், கிழங்குகள். எலிகளையெல்லாம் மக்கள் உண்டார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி என்ற நிலைமை மாறி இப்போது மாநிலம் தழுவிய தொடர்கதையாகி வருகிறது… கடும் வறட்சியிலும் தலை அசைக்கும் பனை மரங்கள்கூட இன்றைக்குப் பட்டுப் போகின்றன. தமிழகத்தின் இயற்கை வளங்கள். நீர் நிலைகள் பற்றி நமது இலக்கியங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் ஆனால், உண்மையான சித்திரம் அதற்கு முரணானதாகும்.
நமக்கென்று எந்த ஜீவ நதியும் இல்லை. தங்கள் உபரியான தண்ணீரை கேரளமும் கர்நாடகமும் கொடுத்தால் கொஞ்சம் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளலாம். இல்லையெனில், பண்டைப் பெருமை பேசி இனவெறி முழக்கங்களை எழுப்புவோம் தம்மால் அவ்வளவுதான் முடியும். தமிழகத்தில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான பரப்பளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கின்றன. இப்போது அந்தப் பரப்பளவும் விரிந்துகொண்டு வருகிறது. கொங்குச் சீமையும், பாரி மன்னனின் தகடூர் தர்மபுரிப் பகுதியும், மங்கம்மாளின் மகிமை சொல்லும் பாண்டிய நாடும் இப்போது நிரந்தர வறட்சி என்ற நிலை நோக்கி வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருக் கின்றன. சென்னை நகரம் உட்பட எல்லா நகரங்களிலும் இன்றைக்கு செழிப்பான வியாபாரம் குடி தண்ணீர் வியாபாரம்தான். சென்ற மாதம் கிராமங்களில்கூட ஒரு குடம் தண்ணீர் ஒரு ரூபாய் என்று விற்பதாக சோகச் செய்திகள் வந்தன.
இந்த நிலை நீடித்தால் நமது தலைமுறையிலேயே தமிழகம் இன்னொரு சைபீரியா வாக, சஹாராவாக உருமாறிவிடும். இந்த இயற்கைச் சீற்றத்தின் தாக்குதலிலிருந்து தாக்குப்பிடிக்க என்ன செய்ய வேண்டும்? வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று தீர்க்க தரிசனக் கவிஞன் அன்றைக்கே சொல்லிவிட்டான். எனவே, நதிகளின் இணைப்பு என்பது இன்றைக்கு நமக்குத்தான் மிக மிக உடனடித் தேவையாகும். சீனத்து மஞ்சள் நதி கங்கை யைப் போல் பன்மடங்கு பெரிது. வெள்ளம் வரும்போது அதனால் ஏற்படும் அழிவுகளுக்கு அளவே இல்லை. `சீனத்தின் துயரம்’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த நதி இன்றைக்கு அமைதியாகிவிட்டது. அதன் திசை திருப்பப்பட்டு வறட்சிப் பகுதிகளுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பூமியில் இன்றைக்கு வளம் கொழிக்கிறது. ‘ஐயோ! இந்தத் திட்டத்துக்கு எத்தனை கோடி செலவாகும்? எத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கணக்குப் போட்டு சீனம் கன்னத்தில் கை வைக்கவில்லை அதனால் ஒரு பக்கம் வறட்சி – இன்னொரு பக்கம் வெள்ளச் சேதம் என்ற தலை எழுத்தையே சீனம் மாற்றி எழுதிவிட்டது. சோவியத் ரஷ்யாவில் வால்கா நதியையும் டான் நதியையும் இணைத்தனர். சைபிரியப் பாலைவனத்தை நோக்கித் திருப்பிவிட்டனர். கணிசமான பகுதி கழனிகளாசிவிட்டது. அந்த நதிகளின் சீற்றமும் அடங்கிப் போய்விட்டது. அதேபோல் கங்கையையும் பிரம்மபுத்திரா வையும் இணைத்து அதனைக் காவிரியுடன் இணைக்க முடியும். ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேய இன்ஜினீயர் அதற்கான திட்டத்தை முதன்முதலாக வகுத்தார்.
காங்கிரஸ் தலைவராக இருந்த சீனிவாச அய்யங்கார், அன்றைய பிரபல இன்ஜினியர் திருமலை அய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், விசுவேசாய்யா போன்ற பெருமக்கள் தொடர்ந்து இந்தத் திட்டத்தினை வலியுறுத்தி வந்தனர். நாடு விடுதலையடைந்த பின்னரும் இந்தத் திட்டம் நனவாகவில்லை ஆனால், தண்ணீரின் முக்கால் பகுதி எத்தனையோ கோடி ஏக்கருக்குப் பாசனம் தரத்தக்க தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்த ரஜினிகாந்த் அரசியல் வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ‘தென்னக நதிகளையாவது இணையுங்கள். அதற்கு எத்தனை கோடிகள் தேவை? துணிந்து செயல்படுங்கள். அந்தக் கோடிகள் வரும்’ என்றார். அவருடைய கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தமிழகம் ஆந்திரா, கர்நாடகா கலைஞர்கள் மனது வைத்தால் குறிப்பிட்ட அளவுக்கு இந்தத் திட்டத்துக்கு உதவ முடியும்
தென்னக நதிகள் இணைப்பு என்பதுதான் என்ன? 1969-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் சிறந்த இன்ஜினீயர். கங்கை காவிரி இணைப்பு இல்லையென்றால் தென்னகம் எதிர்காலத் தில் பாலைவனம்தான் என்று எச்சரித்தார். ஆனால், அன்றாட அரசியலில் நாட்டம் கொண்ட அரசியல்வாதிகள் இவ்வளவு பெரிய திட்டத்துக்கு நிதிக்கு எங்கே போவது என்று பெருமூச்சுவிட்டனர்.
அதோடு ஓய்ந்துவிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதியில் எவ்வளவு தண்ணீர் வருகிறதோ அதனைப் போல் இனனொரு நதியில் ஆறு மடங்கு தண்ணீர் வருகிறது. அந்த ததிதான் ஓரிஸ்ஸா மாநிலத்தில் ஓடும் மகா நதியாகும். அந்த நதிக்குக் குறுக்கே ஹீராகுட் நீர் தேக்கம் இருக்கிறது. அந்த நீர் தேக்கத்தில் தேக்கி பயன்படுத்தப்படும் நீருக்கு அப்பால் ஆறு காவிரி அளவுக் कत ब्या தண்ணீர் வீணாகிக் கடலுக்குப் போய் சேருகிறது. இன்றைக்கு நாட்டின் நான்கு திசைகளை யும் இணைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதற்குப் பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. அதே போல் கங்கை காவிரி இணைப்பைக் கவனத்தில் கொண்டால் நாடு வளம் பெறுவதோடு நீர்வழிப் போக்குவரத்துக்கும் பாதை திறக்கும். சாலை போக்குவரத்துக்கு ஆகும் செலவைவிட நீர்வழிப் போக்குவரத்துக்கு பராமரிப்புச் செலவு மிக மிகக் குறைவாகும். இந்தத் திட்டம் இந்திய ஒற்றுமையின் பொற்கிரீடமாக அமையும் அதேபோல் ஆந்திர மாநிலத் தில் கோதாவரி நதி பாய்கிறது. மராட்டியத்திலிருந்து ஓடி வரும் இந்த நதியின் நீரில் இருபத்தைத்து சதவிகிதம்தான் பயன்படுத்தப்படு கிறது.
மீதி எழுபத்தைந்து சதவிகிதம் தண்ணீர் எவருக்கும் பயனின்றி கடலில் கலக்கிறது. மகாநதியை எந்த மலையையும் குடையாது கோதாவரியுட இணைக்க முடியும். பின்னர் கோதாவரியை கிருஷ்ணா நதியுடன் இணைக்க முடியும். கணிசமான கிருஷ்ணா நதி நீரும் கடலுக்குத்தான் செல்கிறது. இந்த மூன்று நதிகளின் சங்கமமாக புதிய நதி பிறக்கும், அந்த நதி வடபெண்ணை தென்பெண்ணை மூலம் காவிரியுடன் கைகுலுக்கும். பின்னர் அங்கிருந்து நடை பயின்று வைகையை முத்தமிட்டு கடைசியாகத் தாமிரபரணியைத் தழுவி நிற்கும். இதுதான் தென்னக நதிகளின் இணைப்புத் திட்டமாகும் இதற்கு ஐம்பதாயிரம் கோடி ரூபா தேவை என்று திட்டமிட்டிருகிறார்கள்.
பல்லாண்டுகளாக ஆராய்ந்த தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் இந்தத் திட்டம் சாத்தியமே எப்போதோ மத்திய அரசுக்குத் தெரிவித்துவிட்டது. . ஆரம்பத்தில் மகாநதி நீரைத் தர மறுத்த ஓரிஸ்ஸா பின்னர் இசைவு தந்துவிட்டது. இந்தத் திட்டத்துக்கு உதவி செய்யத் தயார் என்று 20 வங்கிகள் அறிவித்திருக்கிறது. டாக்டர் பார்னியா தலைமையில் 1971-ம் ஆண்டு ஐ.நா. நீர்வள நிபுணர் குழு இந்தியா வந்தது. ‘தென்னக இ நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமே அதனை 2000-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு பெரும் பிரச்னையை எதிர்நோக்கும்’ என்று எச்சரித்தது.
அதனை அலட்சியம் செய்தோம். அதனால் மொத்தம் பத்து காவிரி அளவு தண்ணீர் கடலில் கலக்கும்போது ஒரு காவிரி நீரைப் பங்கு போட நான்கு மாநிலங்கள் கோதாவில் குதித்திருக்கின்றன. வருகிறவர்கள் தென்னக நதிகள் இணைப்புக்கு ஐம்பதாயிரம் கோடி என்று மலைப்பதோடு சரி, இன்றைக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரிய முதலாளிகள் வாங்கிய கடனில் ஐம்பத்தெட்டாயிரம் கோடியை ஏப்பம் விட்டுவிட்டனர். அவ்வளவு பெரிய தொகையை இனி வராத கடன் என்று தள்ளுபடியும் செய்து விட்டனர்.
ஆனால், தென்னக நதிகள் இணைப்பு என்றால் ஆலமரத்தடி ஜோசியரிடம் ஆரூடம் பார்க்கின்றனர். நல்ல மழை பெய்து காவிரியில் தண்ணீர் வந்தால் நதி நீர் இணைப்புத் திட்டங்களை நாமும் வசதியாக மறந்து விடுகிறோம். தண்ணீர் வராமல் சோழ மண்டலமே வறட்சியால் வாடுகிற நிலைமை ஏற்படும்போது தென்னக நதிகள் இணைப்புப் பற்றி சிந்திக்கிறோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வரும் குரல் கொடுக்கிறார்.
ஆத்திரா கர்நாடகா முதல்வர்களும் குரல் கொடுக்கிறார்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தென்னக நதிகள் ‘இணைப்புக்கான திட்டத்தையே தயாரித்துவிட்டார். அந்தத் திட்டம் அதிகம் பயன்தரப் போவது தமிழகத்துக்குத்தான். எனவே, தமிழகம்தான் இந்தத் திட்டத்தை தாமிரபரணி வரை அழைத்துவர அதிக ஆர்வம் கொள்ள வேண்டும்.”