மும்பை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். அவரது உடல் மும்பையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நவால் டாடா, சூனி கமிசாரியட் தம்பதியின் மூத்த மகனாக ரத்தன் டாடா பிறந்தார். மும்பை, சிம்லா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த அவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியலில் பட்டம் பெற்றார்.
கடந்த 1962-ம் ஆண்டில் டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார். தனது உழைப்பு, புத்திகூர்மையால் படிப்படியாக உயர்ந்தார். கடந்த 1991-ம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்று 2012 வரை பதவியில் நீடித்தார். பின்னர் 2016 முதல் 2017 வரை மீண்டும் டாடா குழும தலைவராக பணியாற்றினார். அப்போது பல்வேறு புதுமையான திட்டங்களை புகுத்தி குழுமத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். அவரது பதவி காலத்தில் கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம்வாங்கியது. சமையல் உப்பு முதல்சாப்ட்வேர் நிறுவனம் வரை அனைத்துதுறைகளிலும் குழுமம் கால் பதித்தது. இந்தியாவின் தொழில் புரட்சிநாயகனாக அவர் போற்றப்பட்டார்.
தற்போது டாடா குழுமத்தின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி ஆகும்.இந்த குழுமத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமத்தின் கிளைகள் உள்ளன. ரத்தன் டாடாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் ரூ.16,448 கோடி ஆகும்.
வயது முதுமை காரணமாக கடந்த 7-ம் தேதி மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். குறைந்த ரத்த அழுத்தத்தால் அவரது இதயம், மூளை, இதர உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபட்டது. கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக மும்பை என்சிபிஏ மையத்துக்கு ரத்தன் டாடாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரைஅரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரத்தன் டாடாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத்ஷிண்டே, குஜராத் முதல்வர்பூபேந்திர படேல், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகல் 4 மணி அளவில் ரத்தன் டாடாவின் உடல் என்சிபிஏ மையத்தில் இருந்து வோர்லி மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மகாராஷ்டிர அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மூவர்ண கொடி போர்த்தப்பட்ட அவரது உடலுக்கு போலீஸார் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் வோர்லி மின் மயானத்தில் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. பார்சி சமுதாய வழக்கத்தின்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியம், இந்து மதங்களை சேர்ந்த அர்ச்சகர்கள் அவரவர் மதங்களின் வழக்கத்தின்படி பிரார்த்தனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்த நட்சத்திரத்தை இந்தியாஇழந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,” தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர் ரத்தன் டாடா, நாட்டின் மதிப்புமிக்க வணிக நிறுவனத்துக்கு நிலையான தலைமையை வழங்கினார். அவரது பணிவு, கருணையை நினைவுகூர்கிறோம். கல்வி, சுகாதாரம், விலங்குகளின் நலனில் அவர்அக்கறை செலுத்தினார். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளுக்காக சுமார் ரூ.9,000 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார். கரோனா பெருந்தொற்று காலத்தில் கரோனா வைரஸுக்கு எதிரான போருக்காக ரூ.1,500 கோடியை அவர் நன் கொடையாக வழங்கினார். இதன் காரணமாகபாரதத்தின் கொடை வள்ளல் என்றுஅவர் போற்றப்படுகிறார்.