மியாவாடியில் உள்ள இணைய குற்ற மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு உதவுங்கள்

– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை.-

மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரினார்.

தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn, ) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று (10.10.2024) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இணைய குற்ற மையங்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இன்னும் மேற்படி மையங்களில் உள்ள 40 இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் அவர்கள் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் விருப்பம் தெரிவித்தார். மேலும் நவீன விவசாய தொழில்நுட்பப் பயன்பாடு, ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய பீடங்கள் இணைந்து அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற ஆராய்ச்சித் துறைகளுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, திருமதி ப்ராங்டிப் கோங்கிரிதிசுக்சகோர்ன் (Prangtip Kongridhisuksakorn) மற்றும் திரு. தோம் பெட்ச்புக்டெபோங் (Thom Petchpugdepong) உள்ளிட்ட தாய்லாந்து தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு ஆசிய பிரிவின் பணிப்பாளர் திலினி இகலகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.