‘டாடா நகர்’ என்றே பெயர்பெற்ற ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூர் நகர மக்கள் ரத்தன் டாடாவின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். டாடா குழுமத்தை நிறுவியவர் ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாடா. இவர்தான் ஆசியாவின் முதல் எஃகு தொழிற்சாலையை பிஹார் மாநிலத்தில் தோற்றுவித்து டாடா குழுமத்தையும் நிறுவினார். இதனால் அதுவரை மிகவும் பின்தங்கியிருந்த மாநிலம் மளமளவென வளர்ச்சிக் கண்டது.
ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாடாவுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவரது பெயரே எஃகு தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்ட ஊருக்கு சூட்டப்பட்டது. இதனால் ‘டாடாநகர்’ என்றும் ஜம்ஷெட்பூர் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு 2000-ம் ஆண்டில் ஜம்ஷெட்பூர் உள்ளடக்கிய பகுதிகள் ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
அவரது வம்சாவளியைச் சேர்ந்த பலர் டாடா குழுமத்தை வளர்த்து வந்தாலும் ரத்தன் டாடா தங்களது குடும்ப பாரம்பரிய தொழில் மென்மேலும் செழுத்தோங்கச் செய்தார். டாடா எஃகு தொழிற்சாலையின் தலைவராக 1993-ல் ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.
ஜாம்ஷெட்ஜி நுசர்வான்ஜி டாடாவின் பிறந்தநாளான மார்ச் 3-ம் தேதி ஆண்டுதோறும் தவறாது ஜம்ஷெட்பூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1991 பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அடுத்து சர்வதேச சந்தை போட்டிக்கு ஈடுகொடுக்கும் விதமாக டாடா குழுமத்தைத் தகவமைத்தார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவு ஜம்ஷெட்பூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசு ஒருநாள் துக்கம் அனுசரிப்பு: மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
பாரத ரத்னா: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று கோரி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தில், “நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்துவிட்டோம். உலக அரங்கில் டாடா குழுமத்துக்கும் நாட்டுக்கும் முக்கிய இடத்தை ரத்தன் டாடா ஏற்படுத்தினார்.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அவர் அசாத்திய மன உறுதி காட்டியதற்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி பங்களிப்புக்காகவும் ரத்தன் டாடா எப்போதும் நினைவு கூரப்படுவார். டாடா குழுமத்தின் அனைத்து ஓட்டல்களையும் அவர் கரோனா நோயாளிகளுக்கு திறந்துவிட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.