வருண் சக்கரவர்த்தியை மீண்டும் அணிக்குள் கொண்டு வர இதுதான் காரணம் – ஆகாஷ் சோப்ரா

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டும், 2வது ஆட்டத்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தி தனது அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதனால் அந்த அணியில் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் வருண் சக்கரவர்த்தியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வைப்பதற்காகவே கவுதம் கம்பீர் மீண்டும் வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் கொண்டு வந்துள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 3 வருடங்கள் கழித்து வருண் சக்கரவர்த்தி மீண்டும் வந்துள்ளார் என்பது மிகப்பெரிய கேள்வி. முதல் போட்டியில் சுமாரான பந்துகளிலும் அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அது நல்லது. ஆனால் இரண்டாவது போட்டியில் முதல் போட்டியை விட அவர் நன்றாக பந்து வீசினார். முன்பை விட தற்போது அவர் தன்னம்பிக்கையுடனும் தொடர்ச்சியாகவும் அசத்தலாக பந்து வீசுகிறார்.

தொடர்ச்சியாக அவர் ஸ்டம்ப் லைனில் பந்து வீசினார். அது நல்ல அறிகுறி. ஆனால் தற்போது ஏன் நீங்கள் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டும்?. ஏனெனில் அடுத்த டி20 உலகக் கோப்பை இந்தியாவில் தான் நடைபெற உள்ளது. அதன் காரணமாகவே அவர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அதே சமயம் யுஸ்வேந்திர சஹால் இந்திய அணியின் திட்டங்களில் இருக்க வேண்டும். 33 வயதில் வருண் சக்கரவர்த்தி இருந்தால் அவரும் ஏன் இருக்கக்கூடாது?.

ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுத்த நீங்கள் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. கடந்த 2 ஐ.பி.எல் தொடர்களில் அவர் நன்றாகவே செயல்பட்டார். இருப்பினும் அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.