புதுடெல்லி: ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹரியானா தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய இதற்கான கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுசெயலர் கே.சி.வேணுகோபால், தேர்தல் பார்வையாளர்கள் அசோக் கெலாட், அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஹரியானா பொறுப்பாளர் தீபக் பபேரியா இந்த கூட்டத்தில் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பிறகு மக்கான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஹரியானா தேர்தல் முடிவு குறித்து அலசி ஆராய்ந்தோம். கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்த நிலையில் உண்மையில் வெளியான தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராதவை. இரண்டுக்கும் இடையில் ஏராளமான வேறுபாடுகள். அதுகுறித்தும், அதற்கான காரணங்கள் என்னவாக இருந்திருக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். இவ்வாறு மக்கான் தெரிவித்தார்.