சென்னை உப்பளப்பாக்கம் பகுதியில் வசந்த் (ஜீவா), ஆரண்யா (பிரியா பவானி சங்கர்) தம்பதியினர் தாங்கள் புதிதாக வாங்கியிருக்கும் கடற்கரை வீட்டிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகிறார்கள். யாரும் இன்னும் குடிபுகாத அந்தத் தொடர் வீடுகள் பகுதிக்கு அவர்கள் சென்றதும் பல மர்மமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அந்த இடத்தை விட்டுத் தப்பித்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தாலும் ஒரே இடத்துக்கே மீண்டும் மீண்டும் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களைப் போலவே சில உருவங்கள் அங்கே உலாவுவதையும் கண்டறிகிறார்கள். இதன் பின் என்ன நடந்தது, அவர்கள் தப்பித்தனரா, பல்வேறு காலக்கோடுகளை இணைக்கும் இருட்டு என்ன சொல்லவருகிறது என்பதை ஆராய்வதே சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லராக வெளியாகியிருக்கும் `பிளாக்’ படத்தின் கதை. இது 2013-ம் ஆண்டு ஹாலிவிட்டில் வெளியான `கோஹரன்ஸ்’ (Coherence) என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்! சில மாற்றங்களுடன்…
வெகு நாள்களுக்குப் பிறகு சவாலான வேடத்தில் ஜீவா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற குழப்பம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைகிற இடம் என்று கதையின் மொத்த பாரத்தையும் தன்மேல் ஏற்றிக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். இரண்டு நபர்களை மையப்படுத்திய கதை என்பதால் நாயகியாகக் கூடுதல் பொறுப்புடன் பிரியா பவானி சங்கர்! பல இடங்களில் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தாலும் பதற்றம், குழப்பம், கோபம் எல்லாவற்றிற்கும் ஒரே டெம்ளேட் நடிப்பைக் கொடுத்து ஏமாற்றமளிக்கிறார்.
இளமையில் வில்லத்தனமான நடிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கும் விவேக் பிரசன்னா, வயதான தோற்றத்தில் கதாபாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சியை வழங்குவதில் தவறுகிறார். மேக்கப்பும் செயற்கைத்தனமாகவே வெளிப்பட்டிருக்கிறது. நாயகனின் நண்பனாக ஷாராவுக்கு ஒரேயொரு காட்சியில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யோகி ஜேபி, சிந்தூரி ஆகியோரும் வந்துபோகிறார்கள்.
ஒரே குடியிருப்பு எனத் தனக்குக் கொடுக்கப்பட்ட குறுகிய இடத்தை அயர்ச்சி ஏற்படுத்தாமல் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து, அதில் இருட்டு எனும் அமானுஷ்யம் கலந்து சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் கோகுல் பினோய். குறிப்பாகப் பெரும்பான்மையாக வருகிற இரவுநேரக் காட்சிகள் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குப் பல கேள்விகளையும் தர வேண்டும், அதே நேரத்தில் அதீதமாகக் குழப்பிவிடக் கூடாது என்று மதிமேல் பூனையாக இருக்கிற திரைக்கதைக்கு முதுகெலும்பாகியிருக்கிறது பிலோமின் ராஜின் படத்தொகுப்பு. ஒரே கதாபாத்திரம் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருப்பதை நம்புகிற திரைமொழியைத் திரை முழுக்க வியாபிக்கச் செய்திருக்கின்றன அவரது வெட்டுகள்.
பின்னணி இசையில் சாம் சி.எஸ் மிரட்டினாலும் பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பு அதில் தென்படுகின்றது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. டபுள் ஆக்ஷன் சண்டைக் காட்சிகளை நம்பும் வண்ணம் உருவாக்கியிருக்கிறார் சண்டை இயக்குநர் மெட்ரோ மகேஷ். பழைய பங்களா செட்டப், திகிலூட்டும் சிலை, ரெட்ரோ கார் ஆகியவற்றில் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் உழைப்பு தெரிகிறது. இருந்தும் தொடர் வீடுகளை டாப் ஆங்கிளில் பிரமாண்டமாகக் காட்டும்போது ஒருவித செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கவே செய்கிறது.
பிரச்னையின் மையப்புள்ளிக்கு வருவதற்கு முன்பு வைக்கப்பட்ட தொடக்கக் காட்சிகள் கதைக்குப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. ‘இந்தப் படத்திற்கு இது தேவையா’ என்கிற கேள்வியோடு வேகத்தடை போல இரண்டு பாடல்கள் வந்து போகின்றன. அதில் தண்ணீர் அடித்து விளையாடும் மான்டேஜ் எல்லாம் ‘என்ன பாஸு இது’ என்று கேட்கும் ரகம். ஆனால் கதை தொடங்கிய பின்னர் களம் சூடுபிடிக்கிறது. காணுகின்ற ஒவ்வொரு காட்சியும் அவசியம் என்பதாகப் பல கேள்விகளை விட்டுச் சென்று இருக்கை நுனிக்குக் கொண்டு செல்கிறது திரைக்கதை. 1964-ம் ஆண்டு, 48 மணி நேரத்துக்கு முன், நிகழ்காலம் என மூன்று காலக்கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்தது படத்தின் முக்கிய பிளஸ். இரண்டு மனிதர்கள், ஜன்னல், ஓவியம், வீடு, மெழுகுவர்த்தி என்று குறுகிய வெளியில் சுவாரஸ்யமாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.
உச்சபட்ச கேள்விகளைத் தொடுகிற இடத்தில் வருகிற இடைவேளைக்கு, இரண்டாம் பாதி நிறைவானதொரு விடையை அளிக்கவே முயன்றிருக்கிறது. அதில் பேரலல் ரியாலிட்டி, குவாண்டம் பிசிக்ஸ், வொர்ம் ஹோல் எனப் பல்வேறு தியரிகளைப் பேசி கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். அதேபோல பார்வையாளர்களைக் குறைத்து மதிப்பிடாமல் அதை வலிந்து விளக்காமல், கதைக்குத் தேவையான விதத்தில் மட்டும் காட்டியிருப்பது சிறப்பு. கதை நெடுக பயன்படுத்தி வந்த புத்திசாலித்தனத்தை க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஒரு சாதாரணமான முடிவாகத் தெரிவது மைனஸே! அதேபோல் “இரண்டாம் பாகத்துக்கு ஹின்ட் கொடுக்கும் இந்த ட்ரெண்டுக்கு இல்லையா சார் ஒரு எண்டு” என்ற கேள்வியை இங்குமே முன்வைக்க வேண்டியிருக்கிறது.
தேவையில்லாத பாடல்களைத் தவிர்த்து, புத்திசாலித்தனமான திரைக்கதை, தேர்ந்த தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘பிளாக்’, ஒரு சுவாரஸ்யமான படத்திற்கான அனைத்து வண்ணங்களையும் பூசிக் கொள்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…