சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது இங்கிலாந்து. நடப்பு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 5வது நாள் முடிவில் 220 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து தோல்வியடைந்திருக்கிறது பாகிஸ்தான் (அப்ரர் அஹமத்தால் பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறினார்). இதனால் 47 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைத் தனதாக்கியிருக்கிறது இங்கிலாந்து.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. அப்துல்லா ஷபீக் (102), ஷான் மசூத் (151), சல்மான் அலி அகா (104) ஆகிய மூன்று வீரர்கள் சதம் விளாச, 556 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி.
நல்ல ரன் சேர்ப்பு என்றாலும் 2021ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் அணி வெற்றிபெறாததால் ரசிகர்கள் பதற்றமாகவே இருந்தனர்.
இரண்டாம் நாளில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஜோ ரூட் (262) மற்றும் ஹேரி புரூக் (317) அட்டகாசத்துடன், 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது இங்கிலாந்து அணி.
இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்கள் முன்னிலையிலிருந்தது இங்கிலாந்து. இங்கிலாந்து பௌலர்களிடம் சிக்கித் தவித்த பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் தாறுமாறாக அதிகரித்தது.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், பாகிஸ்தான் ஓப்பனர் சபீக்கை வீழ்த்த நான்காவது நாளிலேயே 6 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். அட்கின்சன், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜாக் லீச் 4 விக்கெட்டுகளைக் குவித்தார். 5வது நாளில் காய்ச்சல் காரணமாக அப்ரர் அஹமத் விளையாட முடியவில்லை என்பதால், கடைசி நாளில் 3 விக்கெடுகளை வீழ்த்தி, 220க்கு பாகிஸ்தான் அணியைச் சுருட்டியது இங்கிலாந்து.
சென்ற மாதம் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்காளாதேஷிடம் மோசமான தோல்வியைக் கண்டதால், இந்த போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற நிலை இருந்தது. போட்டியை நன்றாகத் தொடங்கினாலும் ரூட் மற்றும் புரூக் அதிரடிக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது எனத் தெரியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறிப்போனர்.
இங்கிலாந்தின் 25 வயது பேட்ஸ்மேன் ஹேரி புரூக் அதிரடியான பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். அக்டோபர் 15ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்டில், இவரை வீழ்த்த புதிய ஸ்டேட்டர்ஜியுடன் களமிறங்குமா பாகிஸ்தான்… பொறுத்திருந்து பார்க்கலாம்…