தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் மறைந்த ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நரிமன் பாயின்ட்டில் உள்ள என்.சி.பி.ஏ வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்ட உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் அமித் ஷா, பியூஸ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் தனது கட்சி தலைவர்களுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சென்று இருப்பதால் அவர் சார்பாக அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தினர். பியூஸ் கோயல் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு ரத்தன் டாடாவுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, கண்ணீர் சிந்தினார்.
தங்களது வீட்டிற்கு ரத்தன் டாடா வந்த போது வெறும் இட்லி சாம்பார் மட்டும் பரிமாறியதாகவும், அதனை முகம் கோணாமல் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டார். ரத்தன் டாடாவின் உடல் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லப்பட இருந்ததாலும், தொடர்ந்து தலைவர்கள் வந்ததாலும் தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மெரைன் டிரைவ் கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மகாராஷ்டிரா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதோடு நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ரத்தன் டாடாவிற்கு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. அமைச்சரவை கூட்டத்தில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
ரத்தன் டாடா நாய்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். மும்பையில் உள்ள டாடா ஹவுஸ் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு எந்நேரமும் தெருநாய்கள் வந்து சாப்பிட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். ரத்தன் டாடா தெருநாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த நாயிக்கு கோவா என்று பெயர் வைத்திருந்தார். ஒரு முறை ரத்தன் டாடா கோவா சென்று இருந்தபோது அத்தெருநாய் ரத்தன் டாடாவுடன் வந்தது. உடனே அதனை தத்து எடுத்துக்கொண்டார். அதற்கு கோவா என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். டாடாவின் மும்பை ஹவுஸில் மற்ற தெருநாய்களோடு கோவாவும் வளர்ந்து வந்தது. கோவாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தைக்கூட ரத்தன் டாடா இதற்கு முன்பு தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த கோவா நாயும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது. அந்த நாய் ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தது. ஒரு முறை ரத்தன் டாடாவிற்கு பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க முடிவு செய்யபட்டது. இதற்கு இரண்டாம் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்தார். முதலில் விழாவிற்கு வருவதாக சொல்லி விட்டு கடைசி நேரத்தில் ரத்தன் டாடா வரவில்லை. அவரது இரண்டு நாய்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவற்றை விட்டுவிட்டு தன்னால் வர முடியாது என்றும் கூறிவிட்டார். நாய்களுக்காகவே மும்பையில் ஒரு மருத்துவமனையும் ரத்தன் டாடா கட்டி, கடந்த ஜூலை மாதம் தான் திறந்து வைத்தார்.
மாலை 4 மணிக்கு ரத்தன் டாடாவின் உடல் இறுதிச்சடங்கிற்காக ஒர்லி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. முன்னதாக பார்ஸி முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. பார்ஸி இனத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களது உடல் பொதுவாக அமைதி டவர் அல்லது தக்மா என்று அழைக்கப்படும் பார்ஸ் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். அங்கு உடல்கள் கட்டடத்தின் மேலே சூரிய வெளிச்சத்தில் வைத்துவிடுவர். உடலை கழுகுகள் சாப்பிடும். எஞ்சிய எலும்புகள் கீழே இருக்கும் கிணற்றில் விழும். ஆனால் இப்பழைய முறை இப்போது இல்லை. புதிய முறைப்படி எலக்ட்ரிக் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ரத்தன் டாடாவின் உடல் ஒர்லி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.