Ratan Tata: டாடாவை தவறவிட்ட Bharat Ratna – மீண்டும் வலுக்கும் கோரிக்கை! – பரிசீலிக்குமா மத்திய அரசு?

தொழிலாளிகள் கொண்டாடும் ஒரு முதலாளியாக மட்டுமல்லாமல், சமானிய இந்திய மக்களும் கொண்டாடும் ஒரு தொழிலதிபராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் ரத்தன் டாடா. விமான சேவை முதற்கொண்டு கார் உற்பத்தி, மல்டிபுல் இன்டஸ்ட்ரீஸ், டெலிகாம், ஐ.டி நெட்வொர்க், உணவுப் பொருட்கள், உப்பு வரையிலான இந்தியாவின் அனைத்து துறைகளிலும் தனக்கான தனி முத்திரை பதித்த டாடா சாம்ராஜ்ஜியத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தொழிலதிபர், கோடீஸ்வரர் என்பதையும் தாண்டி ஒரு கொடை உள்ளம் படைத்த மனிதராக, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம், கல்வி, உணவு என பல்வேறு வகைகளில் உதவி புரிந்திருக்கிறார்.

ரத்தன் டாடா

இவரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளும் பல்வேறு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

உலக நாடுகள் வழங்கிய விருதுகள், அந்தஸ்துகள்:

குறிப்பாக, 2009-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் `ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்’ (பிரித்தானியப் பேரரசின் வீரத் தலைவன்) அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேபோல, 2008-ல் சிங்கப்பூர் அரசுடன் ரத்தன் டாடா பேணிவந்த நீடித்த வர்த்தக உறவையும், சிங்கப்பூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆற்றிவந்த பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ரத்தன் டாடாவுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் `கௌரவ குடிமகன்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது அதுவே முதல்முறை. இதேபோல, உலகின் தலைசிறந்த முன்னணி பல்கலைக்கழகங்களும் கௌரவ பட்டம் வழங்கி ரத்தன் டாடாவை பெருமை படுத்தியிருக்கின்றன.

குறிப்பாக, 2006-ம் ஆண்டில், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் பொருளாதாரக் கல்விக்காக மிக உயரிய `ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதை’ ரத்தன் டாடாவுக்கு வழங்கி சிறப்பித்தது. அதேபோல, ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகம் வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியது. 2005-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ரத்தன் டாடா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, ரத்தன் டாடாவின் பொதுசேவையைப் பாராட்டி அமெரிக்காவின் கர்னெகி அமைப்பு `நற்பணிகளுக்கான கர்னெகி பதக்கத்தை வழங்கியது. 2008-ம் ஆண்டிற்கான நாஸ்காம்'(NASSCOM) உலகத் தலைமை விருதும் வழங்கப்பட்டது.

ரத்தன் டாடா

இதேபோல, 2004-ம் ஆண்டு சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியது. அதேபோல, லண்டன் வார்விக் பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டத்தையும், லண்டன் பொருளியல் பள்ளி கௌரவ பெல்லோஷிப் பட்டத்தையும் வழங்கியது. பட்டங்கள், விருதுகள், அந்தஸ்துகள் மட்டுமல்லாமல் உலகின் செல்வாக்கு மிக்க நபராக பார்ச்சூன், டைம் உள்ளிட்ட பத்திரிகை இதழ்கள் ரத்தன் டாடாவை பட்டியலிட்டது.

அப்துல் கலாம் – மன்மோகன் சிங்குடன் ரத்தன் டாடா

இந்தியா வழங்கிய விருதுகள்:

இந்தியாவிலும் ஐஐடி உள்ளிட்ட பல முதன்மைப் பல்கலைக்கழகங்கள் கௌவரவ டாக்டர் பட்டத்தை ரத்தன் டாடாவுக்கு வழங்கியிருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மாகாராஷ்டிரா அரசாங்கம் மாநிலத்தின் மிக உயரிய விருதான மகாராஷ்டிரா உத்யோக் ரத்னா’ (Maharashtra Udyog Ratna) விருதை வழங்கி கௌரவித்தது. மிக முக்கியமாக, 2000-ம் ஆண்டு இந்தியாவின் 50-வது குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான `பத்மபூஷண்’ விருது டாடாவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008-ம் ஆண்டு படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான `பத்மவிபூஷன்’ விருதும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் மிக உயரிய விருதான `பாரத ரத்னா’ விருதைப் பெறும் அத்தனை தகுதிகள் இருந்தும் ரத்தன் டாடாவுக்கு அதுமட்டும் கிடைக்கப்பெறாமலேயே இருந்துவந்தது.

வலுத்த கோரிக்கை… பெருந்தன்மை காட்டிய ரத்தன் டாடா:

அந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் `மத்திய அரசு, ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதை வைரலாக்கினர். அப்போது அதற்கு பதிலளித்த ரத்தன் டாடா, “எனக்கு விருது கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், தயவு செய்து இது போன்ற ஒரு பிரசாரத்தை நிறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். விருதுகளைப் பெறுவதைக் காட்டிலும், நான் இந்தியனாக இருப்பதற்கும், நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்குப் பங்களிப்பு செய்வதற்குமே நான் பெரும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்” என்று பெருந்தன்மையுடன் கருத்து தெரிவித்தார். இருப்பினும், பல்வேறு தொழிலதிபர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

பாரத ரத்னா

மரணத்துக்குப் பின்னாலும் ஒலிக்கும் கோரிக்கை:

இந்த நிலையில், ரத்தன் டாடா மறைவையடுத்து மீண்டும் பாரத ரத்னா வழங்கவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக பிரபல தொழிலதிபர் சுஹெல் சேத் தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடியை டேக் செய்து, “இதை நான் சொல்லலாமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரதமர் மோடி அவர்களே பாரத ரத்னா விருதுக்கு ரத்தன் டாடாவை விட ஒரு தகுதிவாய்ந்த நபர் யாரும் இருக்க மாட்டார்கள். தனிப்பட்ட உதாரணத்தால் ஊக்கமளித்து, தனது பொதுசேவைகளின் மூலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார். மேலும் இந்த உண்மையான ஒரு இந்தியனுக்கு வழங்குவது… இந்த விருதை அழகாக்க மட்டுமே செய்யும்!” என்று தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா சட்டமன்றம்

இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவித்த முதல்வர் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம், `ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்!’ என அமைச்சரவையில் தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது.

இறப்புக்கு பிறகாவது பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசு முன்வருமா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.