மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம், தர்பங்காவுக்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் இன்று இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில், ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று மோதியது. இந்த விபத்தில் சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சில ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. அதனால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். ஆனால் தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளிலிருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸார், மீட்புkக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே, விபத்து குறித்து தகவலறிந்த பொன்னேரி, கவரப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் சம்பவ இடத்துக்க விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். சம்பவம் நடந்த இடம் இருட்டாக இருந்ததால் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் மீட்பு பணிகள் நடந்தன. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள், ”109 கி.மீட்டர் வேகத்தில் ரயில் சென்றிருக்கிறது. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு லூப் லைனில் சிக்னல் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அதே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருப்பதாக” தெரிவித்தனர். ரயில் விபத்தில் உயிர் பலிகள், எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்ற விவரங்களை அதிகாரபூர்வமாக ரயில்வே தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி ஆகியோர் தலைமையில் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளது. குறிப்பாக ஆம்பலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்திருப்பதாகவும் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக சென்றதால் சரக்கு ரயிலில் மோதிய சத்தம் சில கி.மீட்டர் தூரம் வரை கேட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி நிலைக்குலைந்து காணப்படுவதால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அரக்கோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர், தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
திருவள்ளூர் ரயில் விபத்தை தொடர்ந்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.