“ஆதிதிராவிடர் நலத் துறை பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்” – அமைச்சர் மதிவேந்தன்

சிவகங்கை: “ஆதிதிராவிடர் நலத் துறை பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்,” என்று ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.

சிவகங்கையில் விடுதலை போராட்ட வீரர் வேலுநாச்சியார் மணிமண்டப வளாத்தில் இன்று விடுதலை போராட்ட வீரர் குயிலி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக சார்பில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மதிவேந்தன், தமிழரசி எம்எல்ஏ, மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன்கென்னடி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் கூறும்போது, “ஆதிதிராவிடர் நலத் துறை பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் தான் பரிசீலிப்பார். ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரில் இருந்தாலும் அனைத்து பட்டியலினம், பழங்குடியின மக்களின் நலனுக்காகவே செயல்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு ஆதிதிராவிடர் வீடுகள், மாணவர்கள் விடுதிகளை சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர்களுக்கான நிதி முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று அவர் கூறினார். முன்னதாக, அதிமுக சார்பில் செந்தில்நாதன் எம்எல்ஏ, நகரச் செயலாளர் என்.எம்.ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.