கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில் ஆயுதபூஜையையொட்டி கூடுதலாக சேர்ந்துள்ள குப்பைகள் சிறப்பு இரவு பணி மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் சுமார் 80,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 2.14 லட்சம் பேரும், தற்போது தோராயமாக 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் கரூர் மாநகராட்சியில் சுமார் 110 டன் குப்பைகள் சேர்கின்றன.
தனியார் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், 650-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் இன்று (அக். 12) தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சியில் ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் விழா போன்ற பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் சேரும். இதனால் குப்பைகளை அகற்றும் பணியில் கூடுதல் நபர்கள் பணியாற்ற வேண்டும்.
ஆயுதபூஜையை ஒட்டி கரூர் மாநகராட்சியில் வியாபாரிகள் வாழை மரக்கன்றுகள், பூசணிக்காய்கள், மாவிலை, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர். விற்பனையாகாத மற்றும் வீணான பொருட்களை அப்படியே அங்கேயே விட்டு விட்டு சென்றனர். மேலும், வாழை மரக்கன்றுகள், உடைக்கப்பட்ட பூசணிக்காய் உள்ளிட்ட கழிவுகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளில் போட்டதால் வழக்கத்தை விட குப்பைகள் அதிகமானது.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா கூறியது: “கரூர் மாநகராட்சியில் நாள்தோறும் 110 டன் குப்பைகள் சேரும். ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுதலான குப்பைகள் சேர்ந்துள்ளன. இதையொட்டி கடந்த 3 நாட்கள் இரவு நேரங்களில் வழக்கமான பணியாளர்களைவிட கூடுதலான பணியாளர்கள் பணியாற்றினர். வாழை மரக்கன்றுகள், பூசணிக்காய்கள் உள்பட குப்பைகளில் வீசப்பட்ட பொருட்களை அகற்றம் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்பு பணி ஒரு வார காலம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.