மும்பை: “இந்தியாவை சீர்குலைப்பதற்காக நாட்டுக்கு எதிராக மோசமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் எச்சரித்துள்ளார். விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் நடந்த தசரா பேரணி கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விஜயதசமி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மோகன் பாகவத் கூறியதாவது: “தர்மம் என்பது ஒரு மதமல்ல. அது இந்தியாவின் சாராம்சம். இங்கு பல மதங்கள் இருந்தாலும் அவற்றை ஒன்றிணைக்கும் அடிப்படை ஆன்மிகமே தர்மம். தர்மம் உலகளாவியது, நித்தியமானது மற்றும் பிரபஞ்சத்துடன் உள்ளார்ந்து இருப்பது. என்னைப் பொறுத்தவரையில் இந்து தர்மம் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று இல்லை. மாறாக மனிதகுலத்துகானதாக அங்கீகரிக்கப்பட்டது. அது உலகுக்கான மதமாக மாறுகிறது.
நாம் ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில் வாழ்கிறோம். என்றாலும் சிலசமயம் இதில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள், தனித்தவர்கள் என்று கூறி, அரசு, சட்டம் மற்றும் நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இது நாட்டை பலவீனப்படுத்தும், அந்நிய சக்திகள் மறைமுகமாக நம் நாட்டினைக் கட்டுப்படுத்த உதவி செய்யும்.
இந்தியாவை சீர்குலைப்பதற்காக நாட்டுக்கு எதிராக மோசமான திட்டங்கள் தற்போது தீட்டப்படுகிறது. அண்டை நாடான வங்கதேசத்தில், அவர்களுக்கு இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதற்காக அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் இந்தியாவின் அச்சுறுத்தலை தடுக்க முடியும் என்ற கூறப்படுகிறது.
எந்தெந்த நாடுகள் இதுபோன்ற கதைகளையும், விவாதங்களையும் முன்வைக்கின்றன என்று நாம் அனைவருக்கும் தெரியும். அவர்களின் பெயர்களை நாம் குறிப்பிடவேண்டிய தேவை இல்லை. இந்தியாவிலும் அவர்களைப் போன்ற சூழல் உருவாக வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.
வங்கதேசத்தில் நடந்த கலவரத்தின் போது என்ன நடந்தது. அங்கு இந்து சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். தங்களைப் பாதுகாக்க அவர்கள் வீதிகளுக்கு வரவேண்டியது இருந்தது. அதனால் ஓரளவு பலனும் இருந்தது. அடிப்படைவாதிகள் இருக்கும் வரை சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடரவே செய்யும்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்தது அவமானகரமான செயல். ஆனால் இது ஒரு தனித்த நிகழ்வு இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்கு பின்பு, நடவடிக்கைகள் தாமதமாகி, குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்ட விதம், குற்றங்களுக்கும் அரசியலுக்கான கூட்டணியின் விளைவு.
ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இது உலக அளவில் இந்தியாவின் மதிப்பினை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நடந்துவரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லாக்கள் – ஹமாஸ் மோதல் அது எவ்வாறு பரவலாகும், அதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள், உலக அளவில் என்னென்ன பாதிப்புகள் எழும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.