புதுடெல்லி: “அரசு விழித்துக் கொள்ளும் முன் இன்னும் எத்தனைக் குடும்பங்கள் அழிய வேண்டும்” என்று மைசூரு தார்பங்கா ரயில் விபத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் இன்று (அக்.12) தனது எக்ஸ் பக்கத்தில், “மைசூரு – தார்பங்கா ரயில் விபத்து பாலாசோர் விபத்தின் கோரத்தை நினைவூட்டுகிறது. ஒரு பயணிகள் ரயில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற விபத்துகளில் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடம் என்ன?. பொறுப்பேற்பு மேலிருந்தே தொடங்க வேண்டும். அரசு விழித்துக் கொள்ளும் முன்னர் இன்னும் எத்தனை குடும்பங்கள் இதுபோன்று அழிய வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விபத்து நடந்தது என்ன? திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரைப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் வந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது. இதில்,சுமார் 20 பேர் காயமடைந்தனர். 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து மீட்கப்பட்ட எஞ்சிய பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் இன்று (சனிக்கிழமை) காலை 4.45 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
விசாரணைக் குழு அமைப்பு: இந்நிலையில் பாக்மதி விரைவு ரயில் டைரக்ட் லைனில் வருவதற்குப் பதிலாக லூப் லைனில் மாறிவந்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கு சிக்னல் கோளாறு காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து விசாரிக்க, 5 உயரதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வு செய்து, ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
“அரசு விழித்துக் கொள்ளும் முன் இன்னும் எத்தனைக் குடும்பங்கள் அழிய வேண்டும்” என்று மைசூரு தார்பங்கா ரயில் விபத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ரயில்வே உதவி எண்கள்: விபத்து குறித்து தகவலறிய ரயில்வே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, பெங்களூரு கேஎஸ்ஆர்: 08861309815, மாண்டியா, கங்கேரி, மைசூரு ரயில் நிலையங்கள்: 0821-2422400, சென்னை கோட்டம்– 04425354151; 044-2435499, பெங்களூரு கோட்டம்: 8861309815, மைசூரு கோட்டம்: 9731143981 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விபத்து மேலதிக தகவலைப் பெறலாம்.