காசா: தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிக் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய படைகள் தற்போது ஆம்புலன்ஸ்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. இதனிடையே, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் போல இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதிகளைத் தாக்கும் இஸ்ரேல்: லெபனானிய அதிகாரிகள் கூறுகையில், “மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்க முயற்சித்து வருகின்றனர். இடிபாடுகளுக்கு அடியில் உயிரிழந்தவர்களின் உடல்களும் உள்ளன. அவற்றின் எண்ணிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதையே நாங்கள் பார்க்கிறோம். ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறினாலும், நாங்கள் களத்தில் பார்ப்பது குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதலையே” என்று தெரிவித்தனர்.
வடக்கு காசாவில் உணவு பாதுகாப்புக்குச் சவால்: இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும்நிலையில் அங்குள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குடும்பங்களின் உணவுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது. மேலும், வடக்குப் பகுதியின் முக்கிய வழிகளை இஸ்ரேல் மூடியுள்ளதால், அக்டோபர் 1-ம் தேதி முதல் வடக்கு காசாவுக்குள் எந்த உணவு உதவியும் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
22 பகுதிகளுக்கு எச்சரிக்கை: தெற்கு லெபனானில் உள்ள மேலும் 22 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு, அங்கு பரந்த அளவில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் வசதிகள் இருப்பதால் தாக்குதலின்போது மக்கள் கொல்லப்படலாம் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.
உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல் – எர்டோகன்: இஸ்ரேல் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், “இஸ்ரேல் என்னும் இனப்படுகொலை பயங்கரவாத அமைப்பின் பின்னால் நிற்பவர்கள் இந்த அவமான அடையாளங்களை (காசா இனப்படுகொலை) தலைமுறைகளுக்கும் சுமந்து செல்வார்கள். இஸ்ரேல் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. உலக அமைதியை பேணிக்காக விரும்புகிறவர்கள் உடனடியாக இந்த தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் ஸ்திரத்தன்மையை மட்டும் இஸ்ரேல் குறிவைக்கவில்லை. சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் அமைதியின்மையை பரப்புகிறது. டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ரஷ்யா, ஈரான் மற்றும் சிரியா தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐநா அமைதிக்குழு மீதான தாக்குதலுக்கு கத்தார் கண்டனம்: தெற்கு லெபனானில் நிறுத்தப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால படையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த அத்துமீறல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தினை மீறுவதாகவும், ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை புறக்கணிப்பதாகவும் உள்ளது என்று சாடியுள்ளது.
பாதிக்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடல்: லெபனானில் மோதல் பகுதியில் இருந்த 207 ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுமார் 100-க்கும் அதிகமானவை இஸ்ரேலிய தாக்குதலால் மூடப்பட்டு விட்டன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததால் ஐந்து மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன. தாக்குதலால் காயமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்ட வருகிறது. குறைவான மனிதர்கள் மற்றும் வசதிகளால் சுகாதார கட்டமைப்பு இந்த இக்கட்டினைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.