சென்னை: சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு – தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று (அக்.12) காலை 4.45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், விபத்துள்ளான ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: அக்டோபர் 11 அன்று சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் மைசூரு – தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12578) விபத்துக்கு உள்ளனது. இதனையடுத்து சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சில ரயில்கள் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் எண் 22802 சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (அக்.12) காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழியாகப் பயணிக்கும். சூலூர்பேட்டையில் நிற்காமல் செல்லும்.
ரயில் எண் 03326 கோயம்புத்தூர் – தான்பத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், இன்று 12.55 மணியளவில் புறப்பட வேண்டிய நிலையில், ஞாயிறு அதிகாலை 12.15 மணியளவில் அதாவது 11 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகிறது.
ரயில் எண். 12656 சென்னை சென் ட்ரல் – அகமதாபாத் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10 மணிக்குப் பதிலாக இன்று மதியம் 12.10 மணிக்கு புறப்படுகிறது.
விபத்துப் பகுதியில் தண்டவாளங்களை மறுசீரமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் மீட்புப் பணிகளை நேரில் கவனித்து வருகிறார்.
விபத்துப் பகுதியிலிருந்து அனைத்துப் பயணிகளும் மீட்கப்பட்டனர். சிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் மூவர் கடுமையான காயங்களுடன் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். காயமடைந்தவர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
விபத்தால் பயணம் தடைபட்டு சென்னை சென்ட்ரலில் காத்திருந்த பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்றிரவு 8.30 மணியளவில் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தார்பங்கா சிறப்பு ரயில் மூலம் இன்று காலை 4.45 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ரயில் விபத்து தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட உதவி எண்கள் 04425354151, 04422435499 ஆகியனவற்றை தொடர்பு கொண்டு மேலதிக தகவல் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்.12) முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: மேலும் திருப்பதி – புதுச்சேரி மெமு ரயில் – 16111, புதுச்சேரி – திருப்பதி மெமு ரயில் 16112, சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் – 16203, 16053, 16057, திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் – 16204, 16054, 16058, அரக்கோணம் – புதுச்சேரி மெமு ரயில், கடப்பா – அரக்கோணம் மெமு ரயில், சென்னை சென்ட்ரல் – திருப்பதி மெமு, திருப்பதி – சென்னை சென்ட்ரல் மெமு ரயில், அரக்கோணம் – திருப்பதி மெமு ரயில், திருப்பதி – அரக்கோணம் மெமு ரயில், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை – நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ், நெல்லூர் – சூலூர்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் திருப்பிவிடப்பட்ட, நேரம் மாற்றியமைக்கப்பட்ட, ரத்து செய்யப்பட்ட ரயில்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு பயணங்களைத் திட்டமிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.