திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ரஜினி நடிப்பில் வெளியான `வேட்டையன்’ திரைப்படம். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தின் முக்கியப் பாத்திரமான நீதிபதி சத்யதேவாக நடித்திருக்கிறார் அமிதாப் பச்சன். முன்னதாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சமூகத்தில் விவாதங்களை எழுப்பியத் திரைப்படம் ஜெய்பீம்.
இந்த திரைப்படம் நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக வாதாடிய வழக்கு குறித்து எடுக்கப்பட்டது. இந்த படத்திலும் வரும் நீதிபதியின் பெயர் சத்யதேவ்.
இது மட்டுமல்லாமல் ஏழை எளிய சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக நடிகர் சூர்யா முன்னெடுப்பில் தொடங்கப்பட்டு, நீதிபதி சந்துரு கௌரவ இயக்குநராக செயல்படும் லா அகாடமிக்கும் சத்யதேவ் லா அகாடமி என்றே பெயரிட்டுள்ளனர்.
யார் இந்த சத்யதேவ்?
நீதிபதி சந்துரு விகடனுக்கு அளித்த ஒரு நேர்காணலில் நீதிபதி சத்யதேவ் குறித்து பேசி இருக்கிறார். “ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் நேரம் தவறாமைக்கு பெயர் போனவர், நேர்மை தவறாதவர், அறத்துடன் செயல்படுபவர். மகன் திருமணத்தின்போதுகூட காலையில் திருமணம் முடிந்ததும் மதியம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார்.” என்று நெகிழ்ந்திருந்தார்.
நீதிபதி சத்யதேவிடம் வழக்கறிஞராக வாதடிய நிகழ்வு குறித்து பேசுகையில், “மீனாட்சி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் நடந்தது. போக்குவரத்து இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி காவல்துறை போராட்டத்துக்குத் தடை விதித்தது. அப்போது, அது தொடர்பான வழக்கு வந்தபோது, சத்யதேவ் அவர்கள்தான் நீதிபதி. அதேநாளில், எம்.ஜி.ஆரும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து மெரினாவில் போராட்டம் செய்துகொண்டிருந்தார்.
‘எம்.ஜி.ஆர் போராட்டத்தில் ஈடுபடும்போது போக்குவரத்து பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதா? பேராசிரியர்கள் போராடினால் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து இடையூறு ஏற்படுமா?’ என்று நான் வழக்கறிஞராக வாதாடினேன். அதை ஏற்றுக்கொண்டு பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்து நீதியின் பக்கம் நின்றார் நீதிபதி சத்யதேவ்.” எனக் கூறினார்.
‘ஜெய்பீம்’ படத்தில், நீதிமன்றத்தில் ஒரு பக்கம் சத்யதேவ் புகைப்படத்தையும் மற்றொரு பக்கம் வி.ஆர் கிருஷ்ணய்யர் புகைப்படத்தையும் வைத்திருப்பார்கள். அதுவும் நீதிபதி சந்துருவின் யோசனைதானாம். நீதிபதி சத்யதேவ் மீதான மரியாதையே அவரைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்த காரணம் என்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…