பிரபல யூடியூபர் மார்கஸ் பிரவுன்லீக்கு (Marques Brownlee) அறிமுகம் தேவையில்லை. ‘MKBHD’ என்ற பெயராலும் அறியப்படுபவர். இணையவாசிகளால் அதிகம் அறியப்படும் தொழில்நுட்ப விமர்சகர். யூடியூப்பில் 1.9 கோடிப் பேர் பிரவுன்லீயைப் பின் தொடர்கின்றனர். புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்ப சாதனங்களை விமர்சனம் செய்வதில் வல்லவர்.
பிரவுன்லீயின் விமர்சன வீச்சுக்கு உதாரணமாக, ‘ஹியூமனே’ (Humane AI Pin) படைப்பின் விமர்சனத்தைக் கூறலாம். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட இந்தச் சாதனம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஏஐ வருகையால் இனி ஸ்மார்ட்போன் திரைகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையே இருக்காது எனும் ஆருடத்துடன் அறிமுகமான இந்தச் சாதனம், ஏஐ அலையால் பெரும் கவனத்தை ஈர்த்தாலும், சந்தையில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.
‘ஹியூமனே’ சாதனத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பிரவுன்லீயின் விமர்சனமும் அதற்குக் காரணம். இந்தச் சாதனம் எந்த விதத்திலும் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை எனக் கிழித்தெடுத்தார் பிரவுன்லீ. “நான் விமர்சனம் செய்ததிலேயே மிக மோசமான சாதனம்” எனவும் பகிரங்கமாக அறிவித்தார். லட்சக்கணக்கில் சந்தாதாரர்களைக் கொண்டவர், இப்படி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, புதிய அறிமுகங்களின் தோல்விக்கு வழி செய்யக்கூடாது என்று பலரும் குறை கூறினர். என்றாலும், கறாரான விமர்சனத்தை நேர்மையாக முன்வைத்ததாக பிரவுன்லீக்குப் பாராட்டுகளும் குவிந்தன.
பல லட்சம் பேர் பின்தொடரும் பிரவுன்லீயின் இத்தன்மையைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை, ‘ஏஐ துறையில் செல்வாக்குப் பெற்ற 100 பேர்’ என்கிற பட்டியலில் பிரவுன்லீயை இணைத்தது. இந்நிலையில், ‘பேனல்ஸ்’ (Panels) என்கிற ‘வால்பேப்பர்’ செயலியை பிரவுன்லீ சொந்தமாக அறிமுகம் செய்தபோது, இணையவாசிகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். ஒரு யூடியூபர் எனும் நிலையிலிருந்து உயர்ந்து, பிரவுன்லீ சொந்தமாக உருவாக்கிய இச்சேவையால் அவர் பின்விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
‘பேனல்ஸ்’ செயலியின் ‘வால்பேப்பர்’களைப் பயன்படுத்தப் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது இணையவாசிகளின் அதிருப்திக்கு ஒரு காரணம் என்றால், பயனர்களிடமிருந்து அதிகமான தரவுகளைத் திரட்டியதும் இதற்குக் காரணமானது. பயனர் ஒருவர், “ஏற்கெனவே இலவசமாகக் கிடைக்கும் சேவைக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது முதல் விதி” என ட்விட்டர் சேவை தொடர்பாக எலான் மஸ்க் கட்டணத்தை அறிமுகம் செய்தபோது பிரவுன்லீ பதிவிட்டிருந்த விமர்சனத்தை மேற்கோள் காட்டி, ‘பேனல்ஸ்’ சேவைக்கு இது பொருந்தாதா? எனக் கேள்வி எழுப்பினார்.
பல லட்சம் பேரால் பின்தொடரப்படும் ஒரு யூடியூபர் கட்டணமின்றி கிடைக்கும் ‘வால்பேப்பர்’ சேவையை மாதம் பத்து டாலருக்கு விற்பனை செய்வதுதான் புதிய சேவையா? எனப் பலரும் கேலி செய்தனர். சமூக வலைத்தளத்தில் இந்த விமர்சன கருத்துகள் பேசுபொருளான நிலையில் ஒரு கட்டத்தில், இணையவாசிகளின் கோபத்தால், புறக்கணிப்புக்கு உள்ளாகும் ‘இணைய ரத்து’ கலாச்சாரத்துக்கு பிரவுன்லீயும் இலக்காகி விடுவார் என்றும் கருதப்பட்டது. ‘பேனல்ஸ்’ செயலியை நீக்கிவிட வேண்டுமென பலர் பதிவு செய்தனர்.
“இணையத்தில் பிரவுன்லீயின் செல்வாக்கு இப்படி இருக்க, அவருக்கா இந்த நிலை” என்றும் சிலர் பரிதாபப்பட்டனர். ஆனால், தன் மீதான கேலியையும் விமர்சன கருத்துகளையும் பிரவுன்லீ அலட்சியம் செய்யவில்லை. “உங்கள் குரல்கள் கேட்கின்றன” எனக் கூறியவர் ‘பேனல்ஸ்’ செயலியில் இலவச வால்பேப்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். தரவுகள் திரட்டப்படும்விதம் தொடர்பாகவும் மாற்றங்களைச் செய்தார். இணையவாசிகளின் இந்த எதிர்ப்பலை, பிரவுன்லீக்கும் அவரைப் போன்ற யூடியூபர்களுக்கும், இன்னும் பிற இணைய செல்வாக்கானவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்தது எனலாம். இந்தச் சம்பவம் ‘இன்ஃப்ளூயென்சர்’கள் நிறைந்திருக்கும் சூழலில் ‘இணையச் செலவாக்கு’ தொடர்பான ஆய்வுக்கும் உரியது.