ஜம்மு: காஷ்மீரில் நடந்த தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட துணை ராணுவப்படை வீரரின் உடல் மீட்கப்பட்டது.
தெற்கு காஷ்மீரின் கோகர்னாக் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கடந்தசெவ்வாய் கிழமை உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ராணுவம், துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் போலீஸார் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, பிராந்திய ராணுவப்படையைச் சேர்ந்த 2 வீரர்களை, தீவிரவாதிகள் 4 பேர் கடத்திச் சென்றனர்.
அவர்களை தேடும் பணிமுடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் கடத்தி செல்லப்பட்டவீரர்களில் ஒருவர் தோளில் குண்டுகாயத்துடன் தப்பி வந்தார். அவர்சிகிச்சைக்காக ராணுவ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
கடத்தப்பட்ட வீரரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்நிலையில் கோகர்னாக் வனப் பகுதியில் கடத்தப்பட்ட துணை ராணுவப்படை வீரரின் உடலை ராணுவத்தினர் நேற்று காலை கண்டுபிடித்து மீட்டனர். அவர் தெற்கு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது வீரர். ராணுவ வீரரை கடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் வெளிநாட்டு தீவிரவாதிகள் என தப்பி வந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.