புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்தனர். அப்போது ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தொடர்பாக புகார் அளித்தனர்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 37 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கெரா ஆகியோர் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது “காங்கிரஸ் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது” என்றனர்.
கார்கேவுக்கு ஆணையம் கடிதம்: இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன்கெரா ஆகியோர் ஹரியானா தேர்தல் முடிவு ஏற்கக்கூடியது அல்ல என 8-ம் தேதி தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இந்த கடிதம் எழுதப்படுகிறது.
நாடு முழுவதும் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலிலும் சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பின்படிதான் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஹரியானா தேர்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது நம் ஜனநாயக பாரம்பரியத்தில் இதுவரை முன்வைக்கப்படாத விமர்சனம் ஆகும். இது மக்களின் முடிவை நிராகரிப்பதாக உள்ளது. இவர்களுடைய அறிக்கை, சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
அதேநேரம், நீங்களும் (கார்கே)எதிர்க்கட்சித் தலைவரும் (ராகுல்)ஹரியானா தேர்தல் முடிவு எதிர்பாராதது என்றும் இதுகுறித்து ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளீர்கள். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுவோம் என்றும் கூறியிருக்கிறீர்கள்.
மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த 2 பேர் உட்பட 12 பேர் அடங்கிய காங்கிரஸ் குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளீர்கள். இதன்படி 9-ம் தேதி (நேற்று) மாலை 6 மணிக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் முதல்வர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரா உள்ளிட்ட 12 பேர் அடங்கிய குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்தது. இக்குழு ஹரியானா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தங்கள் புகார் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பவன் கெரா கூறும்போது, “இவிஎம் தொடர்பாக 20 புகார்கள் வந்தன. அதில்சில இவிஎம்களில் 99% பேட்டரி இருந்ததாகவும் சிலவற்றில் 60 முதல் 70% பேட்டரி இருந்ததாகவும் கூறியுள்ளனர். தேர்தல் முடிந்துசில நாட்கள் ஆன நிலையிலும் சில இவிஎம்களில் 99% பேட்டரிஇருந்தது எப்படி? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல்ஆணையத்தில் தெரிவித்துள்ளோம்” என்றார்.