‘புறாக்களை பிடிக்க வந்தேன்’ என்று கூறி, பெங்களூரில் ஒருவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
ஓசூரில் வசித்து வருபவர் மஞ்சுநாத் என்கிற பரிவாலா மஞ்சா. இவரை தற்போது பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் குறித்து பெங்களூரு போலீசார், “மஞ்சுநாத் ஆள் இல்லாத மற்றும் காவலாளி இல்லாத அடுக்குமாடி வீடுகளில் தான் திருடுவார். அப்படி திருடப் போகும்போது எப்போதும் இரு புறாக்களை கூடவே கொண்டு செல்வார்.
‘இங்கே திருடலாம்’ என நினைக்கக்கூடிய அடுக்குமாடி கட்டடத்தை கண்டுபிடித்தவுடன், மஞ்சுநாத் புறாக்களை பறக்கவிடுவார். அந்த புறாக்களும் குறிப்பிட்ட கட்டடத்தின் உச்சியில் போய் அமர்ந்துக்கொள்ளும். அதன் பின்னர், இவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைவார்.
யாராவது இவரை விசாரித்தால், புறாக்களை பிடிக்க வந்தேன் என்று கூறிவிடுவார். இதே சாக்கில் ஒவ்வொரு மாடியாக சென்று ஆள் இல்லாத வீடுகளை தேடுவார். அப்படி எதாவது வீடு சிக்கிவிட்டால், இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து அலமாரியை உடைத்து திருடுவார்” என்று கூறியுள்ளனர். இவருக்கு கூட்டாளிகள் யாரும் இல்லை. இவர் திருடிய நகைகளை ஓசூரில் விற்று பணமாக்கி விடுவார்.
தற்போது, இவரை பெங்களூரு போலீசார் கைது செய்யும்போது இவரிடம் 30 லட்ச மதிப்புள்ள 475 கிராம் தங்கம் இருந்துள்ளது. இவர் பிடிப்படுவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறை கைது ஆகி பெயிலில் வெளி வரும்போதும் திருட்டு சம்பவங்களில் தான் ஈடுபட்டு வருகிறார் என்கின்றனர்.